தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் திரைப்படம் என்றால் அது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 19ஆம் தேதி வெளியிடப்படவுள்ள லியோ திரைப்படம்தான். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பொதுவாகவே ஏதேனும் சர்சையை எதிர்கொண்டு அதன் பின்னர் திரைக்கு வருவது வாடிக்கையாகவே மாறிவிட்டது. இதில் அதிகப்படியாக வரும் பிரச்னை என்றால் அது, படத்தின் கதையின் உரிமம் தொடர்பானதாக இருந்துள்ளது. ஆனால் இவையெல்லாம் சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தீர்க்கப்பட்டோ அல்லது நீதிமன்ற முடிவுக்குட்பட்டோ படம் வெளியாகியுள்ளது.




இப்படி பொதுவாகவே நடிகர் விஜய்க்கு இப்படியான நெருக்கடிகள் வருவதால் படத்தின் புரோமஷன் வேலைகள் பாதி மீதம் அடைந்து விடுவதாக பேச்சுகள் அடிபடாமல் இல்லை. இந்நிலையில் லியோ படம் வெளியாவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில், இன்னும் இப்படம் எவ்வளவு சிக்கல்களை எதிர்கொள்ளும் எனத் தெரியவில்லை என்று அவரது ரசிகர்கள் யோசிக்கும் அளவிற்கு இதுவரை லியோ திரைப்படம் பல சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளது. அதாவது முதலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழ மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு பாதுகாப்பு காரணங்கள் காரணமாக் கைவிடப்பட்டது. அதேபோல் படத்தின் ட்ரைலர் திரையரங்கில் வெளியிட காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.  அதன் பின்னர் படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படும் என அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை வெளியாகி சில தினங்களில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா, அதிகாலை காட்சிகளுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை, 9 மணி காட்சிகளுக்கு மட்டும்தான் அனுமதி என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 




லியோ படத்திற்கு அடுத்தடுத்து இதுபோன்று சிக்கல்கள் வரவே நடிகர் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் தரப்பில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அதில் குறிப்பாக தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய் என்ற வாசகம் பொருந்திய போஸ்டர்கள்தான் அதிகம் இருந்தது. இந்நிலையில், அதிமுகவில் முதன்மைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது என தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜயைப் பார்த்து பயப்படுவது மட்டும் இல்லாமல் அவரது லியோ படத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது என தெரிவித்துள்ளார். 




ஆனால் நடிகர் விஜய் நடித்து அரசியல் நெருக்கடிக்கு ஆளான திரைப்படங்களில் முதல் இடத்தில் உள்ள திரைப்படம் என்றால் அது கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படம்தான். அதன் பின்னர் கத்தி திரைப்படம் நெருக்கடிக்கு ஆளானது. அதன் பின்னர் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சையை எதிர்கொண்டது.  சர்கார் திரைப்படம் சிக்கலைச் சந்தித்தது. நடிகர் விஜய் நடிப்பில் அதிக சிக்கல்களைச் சந்தித்துள்ள திரைப்படம் என்றால் அது லியோதான் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றது. அதே நேரத்தில் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் தான் இதுபோன்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.