கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று உயிரிழந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் விஜயகாந்தின் பழைய வீடியோக்கள், அவரது மலரும் நினைவுகள், சினிமா காட்சிகள் என பலவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி விஜயகாந்த் பகிரும் பழைய வீடியோ ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.






அப்படி ஒரு வீடியோவில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிகவின் முதல் மாநாட்டில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பேசும் விஜயகாந்த், ”ஏர்போர்ட்ல ஏதாவது ஃபார்ம் கொடுத்து இதை நிரப்பிக் கொடுங்க என சொல்லுவாங்க. எனக்கு என்ன எழுதணும்ன்னு தெரியாத நிலையில் யார் கையிலாவது அதனைக் கொடுப்பேன். அவர்கள் வேகமாக எழுதுவதை கண்டு என் மனது ஏதோ மாதிரி இருக்கும். வசதியா நம்ம இருந்தும் நம்ம அப்பா, அம்மா படிக்க வச்சும், படிக்காம போனது நம்ம கொழுப்பு தானே?


ஆனால் எத்தனை ஏழை, எளிய மாணவர்கள் படிக்காமல் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்கன்னு புரியுறப்ப தான் முடிவுக்கு வந்தேன். நம்ம இந்த நடிப்புல வசதியாக வந்தால், மிக உயர்ந்த இடத்துக்கு வந்தால் முதலில் நாம் படிக்க வைக்க வேண்டும். எல்லாரையும் நாம படிக்க வைக்க வேண்டும் என்பதில் தான் என்னுடைய எண்ணம் ஓடியது. எனக்கு நிறைய மனுக்கள் நிறைய வரும்.


அதில் ‘நாங்கள் இப்படி கஷ்டப்பட்டிருக்கிறோம். எங்களுடைய குழந்தைகளை படிக்க வைங்க’ன்னு சொல்றது தான் நிறைய இருக்கும். அப்ப நான் எதற்காக இத்தனை கட்சிகள் இருக்கு, எதற்காக இத்தனை ஜாதி சங்கங்கள் இருக்கு என யோசிப்பேன். ஏன் யாரையும் படிக்க வைக்க மாட்டேங்கறாங்க என நினைப்பேன். எல்லோருடைய ரத்தத்தை உறியத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்ற சிந்தனை அப்ப இருந்தே எனக்குள்ள ஓட ஆரம்பிச்சிது” எனத் தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்வி பற்றி வனிதா மகள் ஜோவிகா பேசியது வைரலான நிலையில் அதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் இந்த வீடியோவும் வைரலானது.