நடிகை சாய் பல்லவியின், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்து, சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ஆதரவுக் குரல்களும் எதிர்ப்பு குரல்களும் மாறி மாறி எழுந்து வருகின்றன. 


சாய் பல்லவி ராணாவுடன் தான் நடிக்கும் ’விராட பர்வம்’ எனும் திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளின்போது, இந்தக் கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




ஆதரவு தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா


இச்சூழலில், ’குத்து’, ’பொல்லாதவன்’ படங்களில் நடித்த நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா, சாய் பல்லவிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


”சாய் பல்லவிக்கு எதிராக வரும் ட்ரோலிங் மற்றும் மிரட்டல்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் உரிமை இல்லையா? எந்த ஒரு நல்ல மனிதரும் ஒடுக்கப்பட்டவர்களைக் காக்க என்ன சொல்வாரோ அதை தான் சாய் பல்லவி சொல்லி உள்ளார்.


 






 






'நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?’




இன்றைக்கு ஒருவர் 'அன்பாக இருங்கள், நல்ல மனிதனாக இருங்கள்' என்று சொன்னால் அவர் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார். வெறுப்பை உமிழ்பவர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நாம் எப்படிப்பட்ட தலைகீழான உலகில் வாழ்கிறோம்? " என திவ்யா ஸ்பந்தனா ட்வீட் செய்துள்ளார்.


காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட சம்பவம், மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ’ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வைத்த சம்பவம் இரண்டுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை என நடிகை சாய் பல்லவி முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.


சாய் பல்லவியின் கருத்து


“என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.


அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே வேறு வேறு அல்ல.


இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.”என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


சாய் பல்லவியின் இந்தக் கருத்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.