தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிருஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கு இவருடைய குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதே போல் ஏதேனும் குடும்ப விசேஷம் என்றால், எவ்வளவு பிசியாக நடித்து வந்தாலும் அதனை ஓரம் கட்டிவிட்டு குடும்ப விசேஷங்களில் மனைவியாகவும், மருமகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



இதனால் இவரை பார்த்து பலர் பொறாமையும் பட்டுள்ளனர். சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி கொஞ்ச நாள்களாகவே உலவுகிறது. தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரிலிருந்து அக்கினேனி என்ற வார்த்தையை சமந்தா நீக்கிவிட்டார்.


ஆனால், சமந்தாவும் சரி, நாக சைதன்யாவும் சரி, இது குறித்து இன்றுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வந்த சமந்தாவிடம் பிரபல செய்தி தொலைக்காட்சியின் நிருபர் இது குறித்து கேட்க, 'கோவிலுக்கு வந்திருக்கிறேன், இங்க வந்து இந்த மாதிரி கேள்வி கேக்குறீங்க, புத்தி இல்லையா?' என்று கோபமாக பதிலளித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



சில தினங்களுக்கு முன்பாக சமந்தா, நாக சைதன்யா நடித்த 'லவ் ஸ்டோரி' படம் தொடர்பாக நாக சைதன்யா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமந்தா தொடர்பான எந்தவொரு கேள்வியையும் கேட்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்தவர்களுக்கு மட்டுமே, நாக சைதன்யா பேட்டியளித்துள்ளார். சமந்தா இப்போது சகுந்தலம் தெலுங்குப் படத்திலும், காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் முடிந்த பின் அவர் சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வதாக கூறப்பட்டது. அதற்கேற்ப புதிய சினிமா எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில், ஹீரோயின் சென்ட்ரிக் படமொன்றில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.