டிஸ்கோ சாந்தி. இந்தப் பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்ததாக நடனத்தில் வெறும் கவர்ச்சியை மட்டும் வைக்காமல் கவர்ச்சி நடனத்திற்கென்று இலக்கணம் வகுத்தவர். தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த டிஸ்கோ சாந்தியின் வாழ்க்கையில் ஏகப்பட்ட அடிகள், ரணங்கள், இழப்புகள்.
டிஸ்கோ சாந்தி தற்போதைய தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சி.எல். ஆனந்தன் என்பவருக்கு மகளாக பிறந்தார். ஆனந்தன், “விஜயபுரி வீரன்” என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு மூத்த தமிழ் நடிகர். சாந்திக்கு லலிதா குமாரி என்ற சகோதரியும் இருக்கிறார்.
சாந்தி தமிழ் திரைப்படமான உதய கீதம் மூலம் அறிமுகமானார். சிறந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும், தனது நடிப்புத் திறமையைக் காட்ட வேண்டும் என்ற நம்பிக்கையில் சில திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிக்க முயன்றார் சாந்தி. ஆனால் அவருக்கு கோடம்பாக்கம் கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தது. தனக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் அதிலும் தன்னுடைய முத்திரையை பதித்தார் சாந்தி.
டிஸ்கோ சாந்தியுடைய தந்தையின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சாந்தி வேறு வழியில்லாமல் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டவரை சினிமா உலகம் வேறுவிதமாக பார்த்தது.
குடும்ப வறுமைக்காக அத்தனையையும் சகித்துக்கொண்டு அவர் நடித்தார். அவரது கவர்ச்சி நடனத்தை அவரே விரும்பாததால், தன் குடும்பத்தாரிடம் தான் நடித்த திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என கூறியிருந்தார்.
1985ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரையிலான 11 வருட திரை வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஒரியா என பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டிஸ்கோ சாந்தி 1996ஆம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த ஸ்ரீஹரியை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹரிக்கு, சாந்தி மீதான காதலை சாந்தியிடம் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் சாந்தி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அதன் பிறகு இருவரும் ஒரு நாள் கோயிலுக்கு சென்று ஒன்றாக சாமி கும்பிட்டபோது ஸ்ரீஹரி, சாந்திக்கு தெரியாமலே அவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, குடும்பப் பொறுப்பை ஏற்றார். இந்தத் தம்பதிக்கு, அக்ஷரா ஸ்ரீஹரி என்ற மகளும், ஷஷாங்க் ஸ்ரீஹரி, மேகம்ஷ் ஸ்ரீஹரி என்ற மகன்களும் உள்ளனர்.
இதில், அவரது மகள் அக்ஷரா நான்கு மாத குழந்தையாக இருந்தபோது உயிரிழந்துவிட்டார். மகளின் நினைவாக அவரது குடும்பத்தினர் பள்ளி மற்றும் கிராமங்களுக்கு ஃப்ளூரைடு இல்லாத தண்ணீர் வழங்கி உதவ அக்ஷரா அறக்கட்டளையை நிறுவினர். அதோடு மட்டுமின்றி நான்கு கிராமங்களையும் தத்தெடுத்தனர்.
மகளை பறிகொடுத்த சாந்திக்கு அடுத்த இடியாக, 2013ஆம் ஆண்டு “ராம்போ ராஜ்குமார்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது மஞ்சள் காமாலையால் அவரது கணவர் ஸ்ரீஹரி உயிரிழந்தார். சாந்திக்கும் கல்லீரல் கோளாறு ஏற்பட்டது. இதற்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறினார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையிலிருந்து உருவாக்கப்பட்ட ஹிந்தி திரைப்படமான டர்ட்டி பிக்சரில் டிஸ்கோ சாந்தியின் அனுபவங்களிலிருந்து சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி திரையுலகில் பிரகாசமாக ஜொலித்த டிஸ்கோ சாந்தியின் சொந்த வாழ்க்கை முழுவதும் பல திருப்பங்களும், கவலைகளும் சூழ்ந்துள்ளன. இருந்தாலும் அவரது இரண்டு மகன்களும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த ஜீவன்களின் அருகாமைதான் சாந்தியின் தற்போதைய இருப்புக்கு சுவாசம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்