அமெரிக்காவில் ஒரு தந்தை தனது குழந்தை ஒரு திருநராக இருப்பது தனக்கு எவ்வளவு உற்சாகமளிக்கக் கூடியது எனக் கூறுகிறார். தனது குழந்தையின் உலகத்தை புரிந்துகொள்வது தனக்கு எவ்வளவு புதிதான அனுபவமாக இருக்கிறதென்பதை விளக்குகிறார். இதனைப் பார்த்த இன்று புகழ்பெற்ற நடிகராக இருக்கும் ஒரு திருநங்கை சொன்னது என்னத் தெரியுமா….


“அந்த தந்தை பேசுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் பேசுவதைக் கேட்டால் என் மனம் காயப்படுகிறது. அந்தத் தந்தை இப்படி இருக்கிறார் என்றால், ஏன் என்னுடைய தந்தையால் அது முடியவில்லை, ஏன் எனது அம்மா எனது சகோதரனால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை? இந்தத் தந்தை பேசும் இந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் ஒருவரிடம் எதிர்பார்க்கும் துணிவுகூட எனக்கு இருந்ததில்லை.


எல்லாவற்றுக்கும் மேலாக நான் தவறு சொல்ல வேண்டும் என்றால் அது என்னைதான். அந்தத் தந்தைக்கு தனது குழந்தைமேல் இருந்த நம்பிக்கைக்கூட நான் என்மேல் வைக்கவில்லை.”


டிஸ்க்ளோஸர் ( Disclosure)


கடந்த 2020ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ஆவணப்படம் டிஸ்க்ளோஸர். திரைப்படங்களின் தொடக்கக் காலத்தில் இருந்து திரையில் திருநர்கள் ( திருநங்கை , திருநம்பி) எப்படி சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதையும், அந்தச் சித்தரிப்புகள் எந்த வகையில் தங்களை தவறாக பிரதிபலிக்கின்றன என்பதையும் விளக்குகிறார்கள் தற்போது திரைத்துறையில் பணியாற்றும் வெவ்வேறு கலைஞர்கள் (திருநர்கள்)


சினிமாவின் தந்தை


‘சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் கிரிஃப்ஃபித்தின் படத்தில் இருந்து தொடங்குகிறது இந்த ஆவணப்படம். முதல்முறையாக ஒரு படத்தில் பெண் வேடமணிந்த ஒரு ஆண் இந்தப் படத்தில் காட்டப்படுகிறார் .ஆனால் ஒரு நகைச்சுவையாக.  ஒரு குறிப்பிட்டக் காலம் வரை  வெளிவந்த அத்தனைப் படங்களிலும் திருநர்கள் எப்படி எல்லாம் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது விவாதிக்கப்படுகிறது.


மனம் பிறழ்ந்தவர்களாக, கோமாளிகளாக, சைக்கோ கொலைகாரர்களாக, அருவெறுக்கத்தக்கவர்களாக, பாலியல் தொழிலாளர்களாக அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றொரு சுவாரஸ்யமானத் தகவலையும் இந்த ஆவணப்படத்தில் நாம் தெரிந்துகொள்கிறோம்.


அதாவது 80 சதவீதம் அமெரிக்க மக்கள் தங்களது நேரடியான வாழ்க்கையில் ஒரு திருநங்கையையோ திருநம்பியையோ தெரிந்தவர்கள் கிடையாது. அவர்கள் தெரிந்துகொள்ளும் ஒரே  ஊடகம் திரைப்படங்களின் வழியாகதான். அப்போது ஒரு தவறான சித்தரிப்பு ஒரு நாட்டில் 80 சதவீதம் மக்களை போய் சேருவது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பாருங்கள்.


“என்னை பற்றி நான் தெரிந்துகொள்ள அல்லது என்னை நான் புரிந்துகொள்ள ஒரு படம்கூட எனக்கு உதவவில்லை.” என்கிறார் பிரபல இணையத்தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தின் நடித்த திருநங்கை. மாற்று பாலினத்தவர்களை குறித்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எத்தகைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய முக்கியமான ஆவணப்படமாக அமைகிறது ‘டிஸ்க்ளோஸர்’.