90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு தொடர் 'கோலங்கள்'. அந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவராக பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். தேவயானி நடித்த அந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எவர்க்ரீன் தொடர்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது.


 




இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் எதிர்நீச்சல் தொடரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தவறாமல் பார்த்து வருகிறார்கள். மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்க மிகவும் முக்கியமான காரணம் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து தான் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக அவர் சொல்லும் 'யம்மா ஏய்' என்ற வசனமும் அவரின் கர்ஜனையான குரலுக்கும் எப்போவுமே செருமிக்கொண்டே அவர் பேசுவதும் சீரியலின் ஹைலைட்.


சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் திருச்செல்வம், குணசேகரன் கதாபாத்திரம் உருவான கதை பற்றியும் அதற்கு காரணமாக இருந்து ஒருவர் பற்றியும் பேசியிருந்தார். திருச்செல்வம் பேசுகையில் ”நமது தினசரி வாழ்வில் அல்லது நமது குடும்பங்களில் நிச்சயம் குணசேகரன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை சந்தித்து இருப்போம். அப்படி நான் நேரில் சந்தித்த ஒருவரின் குணாதிசயம் தான் குணசேகரன் கதாபாத்திரம்.


இது போன்ற மனிதர்கள் தனக்கான ஒரு கொள்கையை வைத்து கொண்டு அது தான் சரியானது என வாழ்ந்து வருவார்கள். அவர்களால் மாற முடியாது மாறினாலும் மற்றவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி நான் பார்த்ததில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை வைத்து தான் குணசேகரன் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்” என்றார்.



மேலும், ”சீரியலின் லொகேஷனுக்காக பல இடங்களில் சுற்றி திரியும் சமயத்தில்  ஒரு நாள் நண்பரின் வீட்டுக்கு சென்ற போது எதார்த்தமாக அவர் பார்த்த ஒரு நபர் தான் குணசேகரன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரம் ஒரு மோசமான குணாதிசயம் கொண்டவர் என சொல்லிவிட முடியாது. அவர் கஷ்டப்பட்டு வாழ்ந்து வளர்ந்து வந்த சூழல் அவரை அப்படி ஒரு கரடு முரடான கடுப்பான ஆளாக மாற்றியுள்ளது. அந்த நபரிடம் பேசி பழகும் போது தன்னுடைய சீரியலில் இது போன்ற குணாதிசயம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை பயன்படுத்த போவது குறித்து அனுமதி வாங்கப்பட்டுள்ளது” என்றார். 


 




எதிர்நீச்சல் சீரியல் பார்க்கும் பலருக்கும் எரிச்சல் தரக்கூடிய குணசேகரன் என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் சந்தித்த ஒரு நபரின் பிரதிபலிப்பு என்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும் திருச்செல்வம் அந்த உண்மையான குணசேகரனை மக்கள் முன்னர் கொண்டு வர விரும்புவதாகவும் அது விரைவில் நடக்கும் என்பதையும் தெரிவித்து இருந்தார்.


குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்துக்கு அத்தனை விஸ்வசமாக சிறப்பாக நடித்து வருகிறார். அதற்காக தனது நிஜ வாழ்க்கையில் பல அவமானங்களையும் சந்தித்து வருகிறார். சீரியலில் அப்படி நடிப்பதால் நிஜ வாழ்க்கையும் அவர் அப்படி தான் இருப்பார் என மக்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் ஜாலியான கலகலப்பான ஒரு மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.