வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் வாடிவாசல். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படம் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் வெற்றிமாறன் பிஸியாக இருந்து வருவது ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியமான காரணமும் இதில் இருக்கிறது.


அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல்,  வடசென்னை படங்களைக் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது வாடிவாசல் படம் தற்போது எந்தக் கட்டடத்தில்  இருக்கிறது என்பது பற்றி வெற்றிமாறன் பேசியுள்ளார்.


 வாடிவாசல்


வாடிவாசல் திரைப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகும் கதைக்களம். படத்தில் பெரும்பான்மையாக இடம்பெறவிருக்கும் மாடுபிடிக்கும் காட்சிகளை முடிந்த அளவிற்கு சிறந்த ஒரு அனுபவமாக ரசிகர்களுக்கு கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துகொண்டு வருகிறார் வெற்றிமாறன். சூர்யா இந்தப் படத்திற்காக தான் சொந்தமாக ஒரு காளையை வளர்த்து அதனுடன் பயிற்சி செய்து வருகிறார்.


கிராஃபிக்ஸ் காட்சிகள்


அதே நேரத்தில் படத்தின் முக்கியமாக காட்சிகள் சில கிராஃபிக்ஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தக் காட்சிகளுக்கான கிராஃபிகஸ் வேலைகள் தற்போது  லண்டனில் நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படத்தின் தொழிக்நுட்பக் கலைஞர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.


அனிமாட்ரோனிக்ஸ் என்னும் தொழில்நுட்பம்


இந்நிலையில், அனிமாட்ரானிகஸ் என்னும் தொழில்நுட்ப  முறையில் சூர்யா வளர்த்து வரும் அதே மாதிரியான காளையைப் போன்ற ரோபோட் ஒன்றும் தயார்செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். வாடிவாசல் படம் தாமதாவதற்கு இதுவே முக்கியக் காரணமாம்.


விடுதலை 2


தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் சில காட்சிகள் இயக்குநருக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் மீண்டும் எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் படத்தின் தாமதம் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க இருந்த வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பையும் சற்று தாமதப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் தற்போது இப்படம் அடுத்த ஆண்டுவரை தாமதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வடசென்னை 2


இந்த இரண்டுப் படங்களின் வேலை முடிவடைந்து விட்ட பின் வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்கும்  என எதிர்பார்க்கலாம்.


விஜய், வெற்றிமாறன்


அண்மையில் நடிகர் விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பில் நடத்திய கல்வி விருதுகள் வழங்கும் விழாவில், வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை மேடையில் பேசியதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியையும் திரையில் பார்ப்பதற்காக வெற்றிமாறன் மற்றும் விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.