சகோதரர்களுக்கிடையிலான உறவுகளை அழகாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்றான ஆனந்தம் படம் வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது. அதேபோல் உணர்வுப்பூர்வமான காட்சிகள் அடங்கிய படங்களை தங்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை இன்றும் மாற்ற முடியாது. என்னதான் அம்மா, அப்பா, சகோதரிகளை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் அண்ணன் - தம்பி உறவை மையப்படுத்தி வரும் படம் என்றும் ஹிட் தான் என்பது எழுதப்படாத விதி. 


அப்படியான வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆனந்தம்’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக லிங்குசாமி அறிமுகமாகி இருந்தார். மேலும் இப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சிநேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, விஜயகுமார், பாவா லக்‌ஷ்மணன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. 


ஆர்.பி.சௌத்ரி தயாரித்த இப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். மளிகைக் கடை நடத்தும் குடும்பத்தில் அதிக வயது வித்தியாசம் கொண்ட நான்கு அண்ணன் தம்பிகள். இந்த உறவுக்களுக்கிடையேயான முரண்களையும், விரிசல்களையும், பாசத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருந்தது ‘ஆனந்தம்’ படம். 


இந்த படம் இயக்குநர் லிங்குசாமியின் குடும்ப கதையாகும். சொந்த அனுபவத்திலேயே ஒரு கதையை உருவாக்கி அதில் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை இணைத்து ரசிகர்களை கவர்ந்தார். குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இன்று  டிவியில் ஒளிபரப்பினாலும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் என்பது மிகப்பெரியது.


கதறி அழுத ஆர்.பி.சௌத்ரி


இந்த படம் எடுக்கச் செல்லும் முன் என்ன நடந்தது என்பதை இயக்குநர் லிங்குசாமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில், “தமிழ் சினிமாவில் அதற்கு முன்னால் அண்ணன் - தம்பி உறவுகளை வைத்து படம் வந்திருந்தாலும்  என்னுடைய இந்த படம் வேற மாதிரி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. காரணம் இந்த படத்தின் கதை நான் நிஜமாகவே அனுபவித்தது. என்னை விட ஆர்.பி.சௌத்ரி நம்பினார். அவர் ஒவ்வொரு முறை கதை கேட்கும் போதும், எந்த இடத்தில் முதல்முறை அழுவாரோ, அதே இடத்திலும் மீண்டும் அழுவார். 


2002 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி படம் வெளியாகியிருந்தது. படம் வெளியான பிறகு எங்களுடைய மளிகை கடைக்கு போன் வரும். அந்த படத்துக்காக எழுதிய காட்சிகள், ஷூட் பண்ணியது என அனைத்தையும் சேர்த்தாலே 10 வெப் தொடர்கள் எடுக்கலாம். அவ்வளவு இருக்கு.  நான்  எப்பவாது கதை புக்கை எடுத்து பார்ப்பேன். ஆனந்தம் படத்திற்கு முந்தைய பகுதி ஒன்று உள்ளது. அதாவது நாங்கள் எல்லாம் சின்ன வயசுல இருக்கும்போது நடந்தது” என தெரிவித்துள்ளார்.