நான் இசையின் பாதையில் போய்க்கிட்டு இருக்கும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். 


அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இசையின் ஞானியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், சமீபத்தில் மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி படத்தில் இசையமைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். காலத்திற்கு ஏற்ப தன்னை மெருகேற்றி கொண்டிருக்கும் இளையராஜாவை பலரும் இசைக்காக பாராட்டுகின்றனர். அதேசமயம் அவரின் சமீபத்திய பேச்சுகளும் கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.  இப்படியான நிலையில் இளையராஜா தன் மீதான விமர்சனனங்களுக்கு பதிலளித்துள்ளார். 


கேள்வி: மாடர்ன் லவ் சென்னை படத்தின் தீம் பற்றி சொல்லும் போது உங்களின் எண்ணம் என்னவாக இருந்தது? 


பதில்: லவ் என்றாலே மாடர்ன் தான். நான் குற்றம் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். என்னுடைய பார்வை உண்மையை மட்டுமே பார்க்கும். இந்த மாதிரி ப்ராஜெக்ட்ல வேலை பார்க்கும் போது, நான் என் இசையுடன் போட்டிப் போடுவேன். மற்றதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என்ன டைட்டில் வச்சாலும் ஓகே தான். நான் தூக்கி எறிஞ்சி பேசுறதா நினைக்க வேண்டாம். என்னுடைய இடத்தில் இருந்து தான் நான் பேச முடியும். இதை நீங்கள் தலைக்கணம் என சொன்னாலும் சரி. எல்லாரும் எனக்கு தலைக்கணம் அதிகம் என சொல்கிறார்கள். அப்படி சொல்கிறவர்களுக்கு எவ்வளவு தலைக்கணம் இருக்கும்.  நான் இசை பாதையில் போய்க்கிட்டு இருக்கும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. 


கேள்வி:  அப்ப உள்ள காதலுக்கு இப்படி இசையமைத்தோம், இப்ப உள்ள காதலுக்கு இப்படி பண்ணலாம் என தோன்றியதா? 


பதில்: எப்பவுமே முன்கூட்டியே திட்டமிடுவது கிடையாது. நான் என்ன பண்ண வேண்டும், காட்சியமைப்பு பற்றி இயக்குநர் சொன்னவுடன் நான் என்ன நினைக்கிறனோ அதுவே ட்யூனாக மாறும். அது அவர்களுக்கும் பிடிக்கிறது. 70களின் காலக்கட்டத்தில் ஒரு சிச்சுவேஷன் என்னிடம் சொல்லி நான் ஒரு ட்யூன் கொடுப்பேன். அதற்கு மாற்றாக 6 ட்யூன் கொடுப்பேன். நாள் ஒன்றுக்கு 3 படம் முடிப்பேன். தியாகராஜா குமாரராஜா எல்லாம் 3வது தலைமுறையினர். இதுதான் மாடர்ன் லவ்..


இப்படியான நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான ட்யூனை அதிகப்பட்சமாக 2 நிமிடத்தில் இளையராஜா முடித்ததாகவும், மற்ற நேரம் எல்லாம் அவரிடன் நான் கதை பேசி கொண்டிருந்தேன் என்றும் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா அதே நேர்காணலில் தெரிவித்தார். இளையராஜாவை பொறுத்தவரை முன்கூட்டியே திட்டமிடுதல் என்பது கிடையாது. அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதையே இசையாக கொடுப்பார்.