தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் விருது பெற்ற நிலையில், அந்த இயக்குநரின் ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


 விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரவர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்த படம் “காஷ்மீர் ஃபைல்ஸ்”. கடந்த ஆண்டு  கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான இப்படம் கடும் சர்ச்சைகளை சந்தித்தது. 


காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணியை கதைக் களமாகவும், அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டு எடுக்கப்பட்ட  இந்த படத்தை பாஜகவினர் கொண்டாடினர். பல இடங்களில் சிறப்பு காட்சிகளும் திரையிட்டனர். 


பாஜக ஆளும் மாநிலங்களில் 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம் வரலாற்றை மாற்றி விட்டதாகவும், டெல்லி ஜேன்யூ பல்கலைக்கழகம் குறித்தும் தவறாக காட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை கோவா திரைப்பட திருவிழா  நடைபெற்றது.


இதில் தி காஷ்மீர் பைல்ஸ் திரையிடப்பட்ட நிலையில் எந்த விருதையும் பெறவில்லை. அதேசமயம் விழாவின் கடைசி நாளில் பேசிய இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நதவ் லாபிட், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம் என பகிரங்கமாக தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 




நதவ் லாபிட் பேச்சுக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் படக்குழு கொந்தளித்தது. ஆயினும், தன் கருத்தில் லாபிட் உறுதியாக இருந்தார். இத்தகைய சூழலில் 2023ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது விழாவில் சிறந்த படத்துக்கான பிரிவில் தி காஷ்மீர் பைல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 


மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் விழாவில் விருதைப் பெற்ற கையோடு இயக்குநர் விவேக் அஹ்னிஹோத்ரி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த விருது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் இந்திய மக்களின் ஆசீர்வாதங்களுக்காக  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.