ராவண கோட்டம் படத்தின் ஷூட்டிங்கின் போது யாரிடமும் இரக்கம் காட்டவில்லை. அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன் என இயக்குநர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்துள்ளார். 


எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ராவண கோட்டம்


மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பின் உருவாகியுள்ள படம் “ராவண கோட்டம்”. இந்த படத்தில் ஷாந்தனு ஹீரோவாகவும், கயல் ஆனந்தி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. கருவை மர அரசிய, சாதி பிரச்சினை, காதல் போன்ற நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் இப்படம் காட்சிப்படுத்தியுள்ளது ட்ரெய்லரில் இடம் பெற்ற காட்சிகள் மூலம் தெரிகிறது. 


குறிப்பாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர் சாந்தனு, ராவண கோட்டம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளதை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்த படம் மே 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சாந்தனு, ”படத்தின் ஷூட்டிங் நடந்த இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.  படம் எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என ஜாலியாக இருந்த எனக்கு அது அவ்வளவு எளிதல்ல என்பது பின்பு தான் புரிந்தது. காலில் இரத்தம் வர நடித்த நான் எந்த படத்திலும் இப்படியெல்லாம் செய்ததில்லை. இது ஒரு தரமான படைப்பாக இருக்கும்” என தெரிவித்தார். 


நடிகை கயல் ஆனந்தி பேசுகையில், “ பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார். 


மன்னிப்பு கேட்ட இயக்குநர் 


தொடர்ந்து பேசிய இயக்குநர் விக்ரம் சுகுமாறன், “ இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நான் சிரித்துக் கூட பேசவில்லை. அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது. ஆனாலும் இந்நிகழ்ச்சியில் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள். நான் ஒரு பிடிவாதமான இயக்குநர் என்பதால் யாரிடமும் இரக்கம் காட்டவில்லை. அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனியும் அப்படித்தான் இருப்பேன். ராவண கோட்டம் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது.  இந்தப் படத்தில் நடிகர் ஷாந்தனு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் . மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்ட அவருக்கு இந்தப் படம் பெயர்  சொல்லும் படைப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.