புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ஆறுமுகம் மனைவி சிகப்பி (வயது 79), அவரது மகன் என்ஜினீயர் பழனியப்பன் (54) ஆகிய இருவரையும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் சிகப்பி மற்றும் பழனியப்பன் ஆகியோர் அணிந்திருந்த 3¼ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில், 5 தனிப்படைகள் அமைத்து வேந்தன்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடையபுதூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கள்ளங்கலப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் சக்திவேல் (33), தேவகோட்டை தாலுகா உருவாட்டி மாவிலிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (36) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்.




மேலும் விசாரணையில், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி ஆகியோரை பணத்திற்காகவும், நகைக்காகவும் திட்டம் தீட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கட்டை, கையுறை ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் பொன்னமராவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். 


கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்:


கைதான சக்திவேல் கொத்தனாராக வேலைபார்த்து வந்தவர். அவர் பழனியப்பனிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்த போது பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவரது நண்பரான டிரைவர் அலெக்ஸ் உடன் சேர்ந்து பழனியப்பனை கொலை செய்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பழனியப்பனிடம் பணம் நிறைய இருக்கும் என்பது சக்திவேலுக்கு தெரியும் என்பதால் இத்திட்டத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்காக பழனியப்பனை 2 முறை கொலை செய்ய திட்டமிட்டு, தோல்வியை சந்தித்துள்ளனர். 3-வது முறையாக திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளனர். சம்பவத்தன்று பழனியப்பனின் தாயாரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தப்படி பணம் பெரிய அளவில் அங்கு இல்லாமல் இருந்துள்ளது. ரூ.7,500 மற்றும் 3¼ பவுன் நகைகளை கொள்ளையடித்திருக்கின்றனர். பணத்தேவைக்காக தான் திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் கொலையான பழனியப்பன் அணிந்திருந்த மோதிரம், சிகப்பி அணிந்திருந்த தோடு ஆகியவை கைதானவரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.