நான் எதிர்பார்த்த மாதிரி அள்ளி தந்த வானம் படம் வரவே இல்லை என அப்படத்தின் இயக்குநர் விஜி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரோஜா கம்பைன்ஸ் தயாரிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு “அள்ளி தந்த வானம்”. இந்த படத்தில் பிரபுதேவா, முரளி, லைலா, பூர்ணிமா, பிரகாஷ்ராஜ், விவேக் என பலரும் நடித்தனர். வித்யாசாகர் இசையமைத்த இப்படம் மூலம் இயக்குநராக விஜி அறிமுகமாகியிருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் விஜி, “நண்பர்களால் வளர்ந்தவன் நான் என சொல்லலாம். சென்னைக்கு நான் ஏதோ ஒரு வேலை பார்க்கலாம் என வந்தேன். சினிமாவில் வேலை பார்ப்போம் என நினைக்கவில்லை. என்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த ஜான்சன் என்ற வசதியான நபர் சினிமா எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவருக்கும் டி.ராஜேந்தருக்கும் இடையே பழக்கம் இருந்ததால் என்னை அவரிடம் அழைத்து சென்றார். ஆனால் ஆள் நிறைய பேர் இருக்கிறார் என டி.ஆர். மறுத்து விட்டார்.
அதன்பிறகு நான் ஒரு 10 ஆண்டுகள் சினிமாவை விட்டு விட்டு இலக்கிய வட்டத்தில் இணைந்து விட்டேன். நிறைய எழுத்தாளர்களை சந்தித்தேன். பின் சினிமாவுக்குள் வரலாம் என நினைத்தேன். என்னை அழைத்து வந்தது நடிகர் வெங்கட் சுபா தான். அவர் சொன்னதன் பேரில் ராசையா, அரவிந்தன் படங்களில் வேலை செய்தேன். சினிமாவுக்குள் வரும்போது சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.
பிரபுதேவா நடித்த ராசையா படத்தில் 5 படங்களில் வேலை பார்த்த அனுபவத்தை கொடுத்தது. அரவிந்தன் படம் முடித்த பிறகு தனியாக படம் எடுக்கலாம் என நினைத்தோம். ராசையா படத்தில் இருந்து எனக்கும், பிரபுதேவாவுக்கு நல்ல நட்பு உருவானது. நான் சேது படத்தின் மூலம் கிடைத்த நட்பால் விக்ரமுக்கு கதை சொன்னேன். அப்போது விக்ரமை வைத்து யாரும் படம் எடுக்க முன்வரவில்லை. அப்போது தயாரிப்பாளர் காஜா முகைதீன் வந்து பிரபுதேவாவை வைத்து படம் எடுக்கலாம் என சொன்னார். அப்படி “அள்ளி தந்த வானம்” படம் உருவானது.
பிரபுதேவா, பூர்ணிமா தவிர யாருமே அந்த படத்துக்கு எதுவும் சரியா அமையவில்லை. முரளி வந்த பிறகு மொத்த கதையும் மாறிவிட்டது. அவர் நான் உங்களுக்கு உதவி செய்ய தான் வருகிறேன். குணச்சித்திர நடிகர் இல்லை என்பதால் சண்டை காட்சி வேண்டும் என சொல்ல மொத்த கதையும் மாறிப்போனது. விவேக்கின் காமெடி காட்சிகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெகட்டிவ் ரோலில் மட்டும் 2500 அடி வெட்டப்பட்டது. இதனால் படம் துண்டு துண்டாகி விட்டது. இதனால் படத்தின் தரம் இல்லாமல் போய் விட்டது. நான் எதிர்பார்த்த மாதிரி அந்த படம் வரவில்லை. ஆனால் அள்ளி தந்த வானம் பல இடங்களில் 80 நாட்கள் வரை ஓடியது” என தெரிவித்துள்ளார்.