PM Modi On Congress: ராஜஸ்தானில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.


ராஜஸ்தானில் பிரதமர் பரப்புரை:


நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு 102 மக்களவை தொகுதிகளில், கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளில் வரும் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.


நிலையான ஆட்சி தேவை - மோடி


டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,   "ஒற்றுமையே ராஜஸ்தானின் சொத்து. எப்பொழுது நாம் பிளவுபட்டிருக்கிறோமோ, அப்போதெல்லாம் எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இப்போதும் ராஜஸ்தானையும் அதன் மக்களையும் பிரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த 10 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான மற்றும் நேர்மையான அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பதை ராஜஸ்தான் மக்கள் பார்த்தீர்கள். பல தசாப்தங்களாக ராஜஸ்தான் நாட்டின் எல்லையை பாதுகாத்து வருகிறது. பாதுகாப்பான நாடு மற்றும் நிலையான அரசு எவ்வளவு முக்கியம் என்பதை ராஜஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். எனவே, 2014 ஆக இருக்கட்டும். அல்லது 2019 ஆம் ஆண்டில், நாட்டில் வலுவான பாஜக ஆட்சி அமைக்க ராஜஸ்தான் தனது ஆசீர்வாதங்களை ஒன்றிணைத்து வழங்கியது. 


காங்கிரஸ் இருந்திருந்தால்..!


2014-ல் மோடிக்கு டெல்லியில் பணியாற்ற நீங்கள் வாய்ப்பளித்தபோது, ​​யாரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஜம்மு காஷ்மீரில் நமது படைகள் மீது இன்னும் கற்கள் வீசப்பட்டு இருக்கும். நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புபடை வீரர்களின் தலைகள் இன்றும் வெட்டப்பட்டு கொண்டிருக்கும். காங்கிரஸ் அரசு ஒன்றும் செய்து இருக்காது.  நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டிருக்காது. தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளியை பாதுகாத்து காங்கிரஸ் பாவம் செய்தது.  காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கும், ஊழலுக்கான புதிய வழிகளை கண்டுபிடித்து இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. இது தான் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் அடையாளமாக இருந்தது.


ராம நவமிக்கு தடை..


அனுமன் ஜெயந்தி நாளில் உங்களுடன் பேசும் போது, ​​சில நாட்களுக்கு முன் பார்த்த புகைப்படம் நினைவுக்கு வருகிறது. அதன்படி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடைக்காரர் தனது கடையில் அமர்ந்து ஹனுமான் சாலிசாவைக் கேட்டதற்காகவே கொடூரமாக தாக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் சாலிசாவை கேட்பது கூட குற்றமாகி விடுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கூட சில பிரச்னைகளை எதிர்கொண்டது. ராம நவமி அன்று  ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்ட முதல் முறையாக தடை விதிக்கப்பட்டது. ராம, ராம என கோஷமிடும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்தது. 


பீதியில் காங்கிரஸ் கட்சி


நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணியும் பீதியடைந்தது. உங்களின் சொத்தைப் பிடுங்கி, தனி நபர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் திட்டம் தீட்டுகிறது என்பது உண்மை. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், மோடியை அவதூறாகப் பேச ஆரம்பித்தார்கள். உண்மையை ஏன் இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கிய போது, ​​இப்போது அதை ஏற்க பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயார்” என காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.