கோலிசோடா படத்துக்காக நடிகை சீதாவை அணுகியபோது அவருடைய ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என்பதை இயக்குநர் விஜய் மில்டன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


கோலிசோடா படம்


பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் மில்டன், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் 2014 ஆம் ஆண்டு கோலிசோடா என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோர் , ஸ்ரீராம் , பக்கோடா பாண்டி , பசங்க புகழ் முருகேஷ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இயக்குநர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கீழ் படத்தை வெளியிட்டார்.


மேலும் மதுசூதன் ராவ், சுஜாதா சிவகுமார், இமான் அண்ணாச்சி, சம்பத் ராம் ஆகியோரும் நடித்திருந்தனர். கோயம்பேடு சந்தையின் பின்னணியில் எடுக்கப்பட்ட கோலிசோடா படம் தமிழ் சினிமாவில் எதிர்பாராத ஒரு வெற்றியைப் பெற்றது. ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்து நேரில் பாராட்டினார்.


ஏடிஎம் என்ற சீதா


இப்படியான நிலையில் இந்த படத்தில் ஏடிஎம் என்ற கேரக்டரில் சீதா என்ற பெண் நடித்திருந்தார். இவர் அதன்பின் பத்து எண்றதுக்குள்ள உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே வாய்ப்பு பெற்று நடித்தார். கோலிசோடா படத்தில் அப்பாவி பெண்ணாக ஆரம்பித்து பின் அதிரடி காட்டும் சீதாவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச்சானது. 


இவரை கண்டுபிடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டதாக இயக்குநர் விஜய் மில்டன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதில், ‘ஏடிஎம் (சீதா) கேரக்டரை கண்டுபிடித்ததே தனிக்கதை. இவர் தான் படத்தை தூக்கி நிறுத்தப்போகிற கேரக்டர். இந்த கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை முதலில் பார்த்தால் யாருக்கும் பிடிக்கக்கூடாது. ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கணும். தனுஷின் இந்த வசனத்தை சொல்லி அதற்கேற்ற ஒரு பெண் வேண்டும்  என சொன்னேன். 


நீங்க போய் எல்லா இடங்களிலும் மாலையில் சென்று நில்லுங்கள். நாம் தேடும்படி பொண்ணு கிடைத்தால், அவரிடம் விவரத்தை சொல்லிவிட்டு ஆபீஸ் நம்பரை கொடுத்து விருப்பம் இருந்தால் கால் செய்யும்படி சொல்லி விடுங்கள் என நான் கூறி விட்டேன். என்னிடம் இருந்த உதவி இயக்குநர்களுக்கு வேலையே தினமும் கம்பெனிகள் முன்னாடி நிற்பது தான். அப்படி ஒருநாள் நான் மார்க்கெட்டில் இருந்து வந்து கொண்டிருந்தபோது இந்த பெண் பள்ளி சீருடையில் பேக்கை மாட்டிக்கொண்டு விறுவிறுவென நடந்து சென்றதைப் பார்த்தேன். 


ஆஹா நம்ம படத்துக்கு இவள் சரியா இருப்பாளே என சொல்லிவிட்டு, என்னிடம் இருந்த புல்லட் பைக்கில் பின்னாடியே சென்றேன். அந்த பெண்ணிடம் எப்படி பேசுவது என தெரியவில்லை. ஒரு இடத்தில் அவளை மடக்கி, ‘என்னோட பேரு மில்டன். இதான் என்னோட நம்பர். எனக்கு கொஞ்சம் போன் பண்ணுறீங்களா?’ என்று தான் சொன்னேன். சீதா என்ன நினைத்தாளோ தெரியவில்லை ‘தூ’ என்று துப்பி விட்டு போய் விட்டாள்” என விஜய் மில்டன் கூறியிருந்தார்.