17வது ஐபிஎல் தொடரின் 32வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது


இரு அணிகளும் இதற்கு முன்னர் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் குஜராத் அணி இரண்டு போட்டிகளிலும் டெல்லி அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணி அதிகபட்சமாக 171 ரன்கள் சேர்த்துள்ளது. அதேபோல் குஜராத்  அணிக்கு எதிராக டெல்லி அணி 162 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளது. 


போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை மொத்த, 30 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 போட்டிகளிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 173 ஆக உள்ளது.  


இரு அணிகள் நடப்பு சீசனில் இதுவரை


முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில், மூன்று போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. 


அதேபோல் பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் விளையாடுவது மட்டும் இல்லாமல் அணியை வழிநடத்தி வருகின்றார். இவரது தலைமையில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் உள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்கின்றது.