திரையுலகில் நடிகர்களின் என்ட்ரி என்பது பல விதங்களில் அமையும். ஒரு சிலருக்கு எதேச்சையாக வாய்ப்பு கிடைக்கும், ஒரு சிலருக்கோ பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வாய்ப்பு கிடைக்கும். கிடைத்த அந்த வாய்ப்பை அவர்கள் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி அமையும். அப்படி தன்னுடைய கனவை நினைவாக்கி கொள்ள பல கரடு முரடான பாதையை நோக்கி பயணம் செய்து சிகரம் தொட்டவர் தான் நடிகர் விக்ரம். 


 



அப்பாவின் கனவு :



விக்ரம் திரைத்துறையில் நுழைந்ததற்கு பின்னால் ஸ்வாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. அவரின் தந்தை வினோத் ராஜ் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையாக பரமக்குடியில் இருந்து வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ஓடி வந்தவர். ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதனால் மனம் துவண்டு போனார் விக்ரம் அப்பா. மனம் வருத்தத்தில் இருந்த அப்பாவுக்கு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தி கொண்ட விக்ரம் சிறு வயது முதலே பெரிய நடிகனாகி விட  வேண்டும் என தீவிரமாக முயற்சிகளை எடுத்துள்ளார். 


 


சினிமா மீது இருந்த வெறி :


தான் பட்ட கஷ்டம் மகனுக்கு வந்து விட கூடாது என்பதற்காக தன் மகனை ஏற்காட்டில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். ஆனால் அங்கும் விக்ரம் சிந்தனை முழுவதும் நடிப்பின் மீது மட்டுமே இருந்துள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி இனி நடக்கவே முடியாத நிலைக்கு ஆளானார். இருப்பினும் தன்னுடைய கால்கள் செயலிழந்து விட கூடாது என்பதற்காக 23 அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் ஹீரோவாக வேண்டும் என்பதையே உயிர் மூச்சாக கொண்ட விக்ரம் அந்த   வெறியிலேயே நடக்க ஆரம்பித்தார். அந்த அளவுக்கு சினிமா மீது பைத்தியமாக இருந்துள்ளார். 


 


சீரியல் வாய்ப்பு :


பாடி பில்டிங், பாக்ஸிங், பரதநாட்டியம் என சினிமாவுக்காக என்னெவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் அவை அனைத்தையும் கற்றுக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டார்.  விளம்பரங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு நிமிட ஷார்ட் பிலிம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'கலாட்டா கல்யாணம்' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆறு எபிசோட் கொண்ட அந்த சீரியலில் மூன்று எபிசோட் மட்டுமே விக்ரம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



டப்பிங் ஆர்ட்டிஸ்ட் :


அஜித், அப்பாஸ், பிரபுதேவா என பலருக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்துள்ளார். இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை அவரின் காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு டப்பிங் பேசியதன் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.   


 


முதல் படத்தின் வரவேற்பு :


விக்ரம் அறிமுகமான 'என் காதல் கண்மணி' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு  வந்தது. இந்த படம் பற்றிய ஸ்வாரஸ்யமான நிகழ்வு ஒன்றை விக்ரம் பகிர்ந்து  இருந்தார். 'என்னோட முதல் படம் ரிலீஸ் ஆனவுடனே என்னோட ப்ரெண்ட் ரிங்கு அவளோட கணவரோட சேர்ந்து அந்த படத்தை பார்க்க பைலட் தியேட்டருக்கு போயிருக்கா. படம் பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி தியேட்டர்ல வெறும் ஆறு பேரு தான் இருந்தாங்க. அவர்களில் இரண்டு பேர் இன்டர்வெல் சமயத்தில் போயிட்டாங்க. நாங்களும் கிளம்பிட்டா நல்லா இருக்காதுன்னு படம் முடியும் வரையில் இருந்துட்டு வந்தோம்' அப்படினு சொன்னாராம் விக்ரம் தோழி. 


அன்று ஆறு பேர் தான் இருந்தாங்க என மனம் துவண்டு சினிமாவை வெறுத்து இருந்தால் இன்று இப்படி ஒரு அட்டகாசமான கலைஞனை தமிழ் சினிமா இழந்து இருக்கும்.