கோமாளி , லவ் டுடே ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இன்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ஒரு நீண்ட பிறந்தநாள் வாழ்த்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன்.


பிரதீப் ரங்கநாதன்


தமிழி சினிமாவில் இளம் இயக்குநர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இளம் இயக்குநர் என்று சொன்னாலும் மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களுக்கே சவால் விட்டிருக்கின்றன அவரது இரண்டு படங்கள். இன்றைய தலைமுறை இளைஞர்களின் பல்ஸை தனது படங்களில் பிரதிபலிப்பவராக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.


தனது 24 வயதில் தனது முதல் படமான கோமாளியை இயக்கினார் பிரதீப். ஜெயம் ரவி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான லவ் டுடே படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இயக்கம் மட்டுமில்லாமல் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்தார் பிரதீப். பிரதீப் இயக்கிய இரண்டு படங்களும் மிகக் குறைந்த பட்ஜட்டில் எடுக்கப்பட்டு மிகப் பெரிய வசூலை ஈட்டிய திரைப்படங்களாக அமைந்தன.


வாழ்த்து தெரிவித்த விக்கி






இன்று தனது 30ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பிரதீப். அவரது நண்பர்  இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றின் மூலம் தனது பிரதீப்பை வாழ்த்தியுள்ளார். “ சமீபத்தில் என்னுடைய மனதுக்கு பிடித்தமான இயக்குநர். ஒரு சிறந்த நடிகர் மற்றும் எனது நண்பர் பிரதீப்புக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.


உங்களைப் போன்ற ஒரு நண்பரை பெற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களுடன் எனக்கு சில நல்ல நினைவுகளை சேர்த்து வைத்திருப்பதில் மகிழ்ச்சி. இனி வரும் காலங்களில் இன்னும் நிறைய நினைவுகளை சேர்த்துக் கொள்வோம் என நம்புகிறேன்.  நாம் பெருமையுடன் நிமிர்ந்து பார்க்கும் நட்சத்திரங்களைப் போல் உங்களை பார்க்க காத்திருக்கிறேன். என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் “ என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் ஷிவன்.


இந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இத்துடன் இருவரும் சேர்ந்து ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் எடுக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் விக்கி.