செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் விக்னேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், “ செஸ் ஒலிம்பியாட் 2022 நிகழ்வை இயக்குவதற்கான அரிய வாய்ப்பை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எனது நன்றி. அதே போல, எனது வரிகளுக்கு குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கும், செஸ் ஒலிம்பியாட் ஆல்பத்தை இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனது நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடந்துமுடிந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.
அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், இந்திய பி அணி வெண்லகப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இதையடுத்து, நேற்று இரவு நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவில் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடக்க விழா போன்றே, நிறைவு விழா நிகழ்ச்சிகளும் இயக்குநர் விக்னேஷ் சிவனால் இயக்கப்பட்டது.
கமல் குரல்
தொடக்க விழாவில் தமிழின் பெருமைகளை குறித்து செய்யப்பட்ட சிறப்பு பகுதி, உலகநாயகன் கமல்ஹாசனின் குரலில் செய்யப்பட்டது. அதே போல நிறைவு விழாவிலும் கமல் குரலால் அதிர்ந்தது அரங்கம்.
தமிழ் மண் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட அந்த கலை நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்காக கமல்ஹாசன் டப்பிங் செய்வதை வீடியோ காலில் பார்ப்பது போன்ற வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.