இலங்கை அரசு சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.உலகதமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் மூலம் தடை நீக்கப்பட்டுள்ளது.இலங்கையின் பாதுகாப்பு துறை தான் இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தெரிகிறது.குறிப்பாக தற்போது புலம்பெயர் அமைப்புகளும் ,தமிழர்களும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாகவே தெரிகிறது. ஆகவே உதவி தேவைப்படும் பட்சத்தில் பயங்கரவாத பட்டியலில் இருந்த தமிழ் மக்கள், தமிழ் அமைப்புகளை இலங்கை அரசு விடுவித்து இருப்பதாகவே தற்போது தெரிய வருகிறது .தேசிய பாதுகாப்பு , பயங்கரவாதம் என்ற அடிப்படையில் யுத்த காலத்தில் பல புலம்பெயர் அமைப்புகளும், புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களும் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தார்கள்
வரலாற்றில் என்றும் இல்லாத வாரு ,தொடர்ந்து புலம்பெயர் அமைப்புகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டும் பல வருடங்களாக நீக்கப்படாத தடையை இலங்கை அரசு தற்போது நீக்கி இருக்கிறது.இலங்கையில் தற்போது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது, உதவி செய்யும் சர்வதேச நாணய நிதியமும் ,உலக வங்கி கூட கைவிரித்த நிலையில் அயல்நாடுகளை இலங்கை நம்பி இருக்கிறது .
இருந்தபோதிலும் தங்களுக்கு தற்போது பெரும்பாலான உதவிகளை செய்ய இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தயாராக இருப்பதை இலங்கை அரசு உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது .இதன் அடிப்படையில் கடந்த யுத்த காலத்தில் வெளிநாடுகளில் செயல்பட்ட தமிழ் மக்களின் பல அமைப்புகளை இலங்கை அரசால் தடை செய்தது.
தவறான தகவல்களாலும், புலம்பெயர் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளாலும், இலங்கை அரசு பயங்கரவாத தடைச் சட்டம் என்ற ஒரு கோட்டின் கீழ் பல புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது. இந்நிலையில் தற்போது அந்த புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கிய அமைப்புகள் சிலவற்றின் தடையை இலங்கை அரசு நீக்கி இருக்கிறது .
இதற்கான காரணம் என்னவென்று நாம் சற்று ஆராயும் போது, தற்போது இலங்கைக்கு அதிகமான உதவிகள் தேவைப்படுகிறது. முதலீட்டாளர்கள் தேவை, இலங்கையின் பொருளாதாரத்தை, அபிவிருத்தியை கட்டி எழுப்ப முக்கியமாக புலம்பெயர் தமிழர்களின் உதவி தேவைப்படுகிறது.ஒரு காலத்தில் யுத்தத்தின் காரணமாக விரட்டப்பட்ட தமிழ் மக்கள் , வாழ்வா சாவா போராட்டத்துக்கு மத்தியில் , வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்த இலங்கை வாழ் தமிழ் மக்கள் தம்மை எந்தெந்த துறைகளில் வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்தந்த துறைகளில் வளர்ந்து தற்போது மிகப்பெரும் முதலீட்டாளர்களாகவும் ,துறை சார்ந்த வல்லுனர்களாகவும் இருக்கிறார்கள்.இந்நிலையில் இலங்கைக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது,அதாவது தமது தாய் மண்ணுக்கு பிரச்சனை என்று வரும்போது உதவிக்கரம் நீட்ட அம்மக்கள் முன் வந்திருப்பதை நாம் அறிய முடிகிறது .
ஆகவே இலங்கை அரசு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் தடையை நீக்கி இருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.இலங்கை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தான் தடை செய்யப்பட்டன .பயங்கரவாதத்தை தூண்டு வகையிலும், பயங்கரவாதத்துக்கு உதவி செய்யும் வகையிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் செயல்படுவதாக இலங்கை அரசால் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் தற்போது நாடு இக்கட்டான நிலையில் தவிக்கும் போது , அவர்களின் உதவி தற்போது தேவைப்படும் நேரத்தில் இலங்கை அரசு தடையை நீக்கி இருப்பதாக அறிய முடிகிறது.தமக்கான அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியென இவற்றை தமிழ் மக்கள் வாய் திறந்து கேட்டாலே தடை செய்யப்பட்ட அமைப்பு, தடை செய்யப்பட்டவர்கள் என்ற முத்திரையை இலங்கை அரசு கடந்த காலங்களில் பதித்து வந்தது.
ஆனாலும் தொடர்ந்து பல வருடங்களாக, பல்வேறு உலக நாடுகளும், தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தங்களுக்கென்று ஒரு தேவை ஏற்படும் நேரத்தில் இலங்கை அரசு சில புலம்பெயர் அமைப்புகளின் தடையை நீக்கி இருப்பது புலம்பெயர்
தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் முதலீடுகள் இலங்கைக்கு வருமானால் ,தமிழ் மக்களுக்கான முழுச் சுதந்திரமும் ,இலங்கையில் வழங்கப்படுமானால் இலங்கையின் அபிவிருத்தி என்பது நிலைத்த ,நீடித்ததாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை