தோல்வி படம் கொடுக்காத இயக்குனர் வெற்றிமாறன்:


இயக்குனர் வெற்றிமாறன்,  தன்னுடைய சினிமா வரலாற்றில் தோல்வி படங்களே கொடுக்காதவர் என்று சொல்லும் அளவிற்கு, இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார். அதோடு ஒவ்வொரு படத்தையும் தரமான படைப்பாகவும் இயக்கி இருந்தார். ஆடுகளம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றவர் வெற்றிமாறன். இதே போன்று விசாரணை படத்திற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. தனுஷை வைத்து இவர் இயக்கிய அசுரன் படத்திற்கும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றார். அடுத்தடுத்த பல தேசிய விருதுகளை பெற்ற இயக்குநர் என்ற பெருமையும் வெற்றிமாறனுக்கு உண்டு.


விடுதலை முதல் பாகம்:




அசுரன் படத்திற்கு பிறகு, இயக்குனர் வெற்றிமாறன் 4 ஆண்டுகள் கழித்து சூரியை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் தான் 'விடுதலை' படத்தின் முதல் பாகம். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து தான் 2ஆம் பாகம் உருவானது. அந்த வகையில் நேற்று விடுதலை பார்ட் 2 திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 


விடுதலை பார்ட் 2:


முதல் பாகம் சூரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியானது. விடுதலை பார்ட் 2 திரைப்படம் வெளியாகி, முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 9 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது . இந்த நிலையில் தான் வெற்றிமாறன் விடுதலை பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படங்களில் செய்த தவறு நெட்டிசன்களின் கண்களில் சிக்க, இதை எப்படி வெற்றிமாறன் கவனிக்காமல் போனார்? என கழுவி ஊற்றி வருகிறார்கள்.


வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய தவறு:


அதாவது விடுதலை 1 மற்றும் விடுதலை 2 பாகத்தில், ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் முதல் பாகத்தில் போலீஸ் ரோலில் நடித்திருந்தார். கவுதம் மேனன் உடன் இணைந்து போலீசாக இவர் வரும் காட்சிகள் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால், விடுதலை பார்ட் 2 படத்தில், வேல்ராஜ்  பண்ணையார் ரோலில் நடித்துள்ளார். எப்படி வெற்றிமாறன் தன்னுடைய படத்தில் ஒரே நபரை முதல் பாகத்தில் போலீஸாகவும், இரண்டாம் பாகத்தில் பண்ணையாராகவும் காட்டினார் என கேள்வி எழுப்பி இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு கழுவி ஊற்றி வருகிறார்கள்.




எந்த ஒரு படமும் தவறுகள் இல்லாமல் எடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், அந்த தவறுகள் கண்டுபிடிக்க முடியாதது போல் இருக்கும் ஆனால் வெற்றிமாறன் செய்துள்ள இந்த மிகப்பெரிய தவறு கண்டுபிடிக்கும் அளவுக்கு அப்பட்டமாக உள்ளது என்பதே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் விமர்சனமாக உள்ளது.


விடுதலை 2 வசூல்:


ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விடுதலை பார்ட் 1 படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.65 கோடி வரை வசூல் செய்தது. தற்போது உருவாகியுள்ள விடுதலை 2-ஆம் பாகம்,  ரூ.65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.100 கோடி வசூலை எட்டுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.