இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அசுரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை, விஜய் சேதுபதியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கும் நிலையில் முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேல்ராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
விடுதலை படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் அடர்ந்த காடுகள், திண்டுக்கலில் உள்ள சிறுமலை உள்ளிட்ட பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
விடுதலை படத்தின் தயாரிப்பில் ஆர்.எஸ்.என்ஃபோடைன்மெண்ட், கிராஸ்ரூட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இரண்டு பாகமாக விடுதலை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் உருவான வீடியோவை பகிர்ந்து, பிப்ரவரி 8 ஆம் தேதி ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த பாடலை சுகா எழுத தனுஷ் மற்றும் அனன்யா பட் இருவரும் பாடியுள்ளனர்.