மின் எண் உடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தில் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதால் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டிருப்பதாக மின்வாரியம் கவலை என தகவல் வெளியாகியுள்ளது.


நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 97% பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல தொடர்பில்லாத ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தின் நோக்கம் தோற்கடிக்கப்படும் என மின் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் முறைபடி நடக்கிறதா? என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 


மின் இணைப்பு எண்ணுடன் அதார் எண் இணைக்கும் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 


ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண், மொபைல் எண், இமேஜில் இருக்கும் டெக்ஸ்டை (captcha) டைப் செய்ய வேண்டும். பின், நீங்கள் டைப் செய்த மின் இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தெரியும். அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு இருப்பவரா அல்லது அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். இந்த ஆப்ஷன்களில் உங்கள் பதிலை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பின், உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.


ஆதார் எண்ணை பதிவு செய்த பின், அதேதிரையில் இருக்கும் checkbox டிக் செய்து நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பின், ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள கைப்பேசி எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்தால் போதும். உங்கள் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைக்கப்படும். இதற்கான குறுஞ்செய்தியும் உங்கள் தொலைப்பேசிக்கு வந்துவிடும். மிக எளிதாக இந்த முறையை பயன்படுத்தி ஆதாரை இணைத்து விடலாம்.


தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.









2023 பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.