இயக்குநர் வெற்றிமாறன் தன் படங்களின் டைட்டில் எப்படி உருவானது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 ஆகிய படங்களை இயக்கி தற்கால தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார். 


வெற்றிமாறன் படத்தில் ஆடுகளம், அசுரன் படங்கள் தேசிய விருதுகளை குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக விசாரணை பாகம் 2, வடசென்னை 2, வாடிவாசல் உள்ளிட்ட படங்களை அடுத்தடுத்து வெற்றிமாறன் இயக்குகிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் ஒரு காட்சியிலும் அவர் வந்துள்ளார். தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார். 


டைட்டில் உருவான விதம் 


இப்படியான நிலையில், வெற்றிமாறன் தன் படங்களின் டைட்டில் எப்படி உருவானது என்பதை நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.அதில், ஆடுகளம் படத்திற்கு 4, 5 பெயர்களை எழுதினோம். எனக்கும் தனுஷூக்கும் ஆடுகளம் என்ற பெயர் சரியாகப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் எங்களுக்காக ஒப்புக்கொண்டார்.  விசாரணை படத்துக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. அசுரன் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகியிருந்த நிலையில், அதனை தயாரித்த ஆர்.கே.செல்வமணியிடன் டைட்டில் வேண்டும் என கேட்டேன். உடனெ கொடுத்தார். 


விடுதலை படம் நிறைய அர்த்தங்களால் ஆனது. அதே பெயரில் ஏற்கனவே படம் வெளியாகி இருந்தாலும், நிறைய அர்த்தங்களில் நாங்கள் ஒரு அர்த்தத்தை எடுத்துக் கொண்டோம். அதேபோல் வடசென்னை படம், கதை எழுதும் போதே அதே டைட்டிலில் தான் எழுத தொடங்கினோம் என வெற்றிமாறன் கூறினார்.


தனுஷ் பதிலை கேட்டு ஷாக்கான வெற்றிமாறன்


பொல்லாதவன் படத்துக்கு நான் முதலில் எழுத்தாளர் பாலகுமாரனின் நாவலின் பெயரான “இரும்புக்குதிரை” என வைத்திருந்தேன். ஆனால் அது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அந்நேரம் பழைய படங்களின் டைட்டில்களை திரும்பவும் புதிய படங்களுக்கு வைக்கும் கலாச்சாரம் தொடங்கியிருந்தது. அதனால் தயாரிப்பாளர் “தம்பிக்கு இந்த ஊரு” டைட்டிலை சொன்னார். எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே நான், அதுக்கு பேசாமல் ‘பொல்லாதவன்’ன்னு டைட்டில் வைக்கலாம் என சொல்ல, சட்டென்று தயாரிப்பாளர் ஓகே என சொன்னார். 


இதனை சற்றும் எதிர்பாராத நான், அப்படியெல்லாம் வைக்க முடியாது. தனுஷை கேட்டு தான் சொல்ல முடியும் என சொல்லிவிட்டு அவருக்கு போன் செய்தேன்.  தனுஷ் என்னை எப்படியாவது காப்பாற்றுவார் என நினைத்தேன். ஆனால் அவரோ நேர்மையா சொல்றேன் இந்த டைட்டில் எனக்கு பிடிச்சி இருக்குது. ஆனாலும் ரஜினியை கேட்காமல் சொல்ல முடியாது என கூறிவிட்டார். பின்னர் ரஜினியிடம் அனுமதி பெற்று அந்த டைட்டிலை வைத்தோம்.