சேலத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் சனியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், "இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான்கரை ஆண்டு காலம் முதல்வராக இருந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக் காத்து வந்த இயக்கத்தை பேராசை கொண்டு அழிக்க நினைத்தார். எம்ஜிஆர் உருவாக்கிய விதியினை பொதுக்குழுவை கூட்டி அந்த விதியினை மாற்றி சாதாரண தொண்டரும் பொதுச் செயலாளர் ஆகலாம் என்ற நிலைமையை பணக்காரர், கோடீஸ்வரர் தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று மாற்றி உள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றம் கருத்தை ஏற்று, தேர்தல் ஆணையம் பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று. சென்னை நீதிமன்றம் அடுத்த மாதம் தீர்ப்பு கூறவுள்ளது. சட்ட விதிகள் நமக்கு ஆதரவாக உள்ளது. அதிமுக ஓபிஎஸ் தலைமையில் இயங்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் இரண்டு சதவீத வாக்குகள் கூட அவரால் பெற முடியாது. ஆனால் இரட்டை இலை சின்னத்தை வைத்து அவர் எட்டு தோல்விகளை சந்தித்து, ஒன்பதாவது தோல்வியாக பெங்களூரு புலிகேசி பகுதியில் இரட்டை இலை போட்டியிடும் என்று அறிவித்தார். பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என்று வாபஸ் வாங்கிக் கொண்டார். அங்கு கேபி முனுசாமி பிரச்சாரத்திற்கு அனுப்பினர். இப்படி இரட்டை இலை சின்னம் பெற்றும், பணபலம், அதிகார பலம் இருந்தும் அவர் 9 தோல்விகளை தழுவி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தேராது. ஒன்று பட்டால் இயக்கம் ஆட்சிக்கு வரும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெறும். ஒவ்வொரு தொண்டரும் எண்ணுவது அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான், 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்க வேண்டும் என்பதுதான். திருச்சி மாநாட்டில் மூன்று லட்சம் பேரை ஒன்றிணைத்து தொண்டர்கள் பலம் எங்கள் பக்கம் தான் என்று நிரூபித்தோம். கொங்கு மண்டலத்தில் எங்களுக்கு ஆதரவில்லை என்று சொன்னார்கள். எனவே சேலத்தில் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டிற்கு திருச்சியை விட அதிகமான தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடியில் எங்கள் மாவட்ட செயலாளரை இபிஎஸ் அணியினர் மிரட்டும் தோழியில் நடந்து கொண்டார்கள். நாங்கள் எச்சரித்து வந்துள்ளோம். எங்களை மிரட்டினால் எடப்பாடி தமிழகத்தில் எந்த பகுதிக்கும் வர முடியாது. அவருடைய பலம் அவருக்கு தெரியும், எங்களுடைய பலம் எங்களுக்கு தெரியும். பணபலம், அதிகார பலம் எல்லாம் எங்களிடம் செல்லாது. சேலம் மாவட்டம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் கோட்டை. ஆனால் எடப்பாடி என்ற சுயநலவாதிகள் இந்த இயக்கம் கெட்டு விடக்கூடாது. அந்த சுயநலவாதி ஒன்றாக இருக்க நினைத்தால் இந்த இயக்கத்தில் இருக்கலாம், இல்லையென்றால் அவரை நீக்கி விட்டு நாங்கள் ஒன்றுபட்டு புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை அமைப்போம் ”என்று பேசினார்.