இயக்குநர் அமீரை, சக இயக்குநரான வெற்றிமாறன் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான கருத்து மோதல் பிரச்சினை  மிகப்பெரிய அளவில் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது. 2007 ஆம் ஆண்டு பருத்தி வீரன் படம் வெளியான நிலையில் அப்போது எழுந்த பிரச்சினை மீண்டும் 16 ஆண்டுகள் கழித்து எழுந்துள்ளது. அமீரை ஞானவேல் ராஜா ‘திருடன்’ என சொன்னது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்காரா, நடிகர் பொன்வண்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக காட்டமான கருத்துகளை பதிவிட்டனர். 


இப்படியாக பிரச்சினை சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இதுவரை பதிலளிக்கவில்லை. இதுவும் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர் வெற்றிமாறன், அமீரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீருக்கு, பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்த சசிகுமார், வெற்றிமாறன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நன்கு பழக்கமானவர்கள். 






அவர்கள் எல்லோரும் அருகில் இருந்து அமீரின் பிரச்சினைகளை பார்த்துள்ள நிலையில் சசிகுமார்,சமுத்திரகனி இருவரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டனர். ஆனால் அமிரீன் மிக நெருங்கிய நண்பரும், அவரை வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தவருமான வெற்றிமாறன் இதுவரை அமீர் - ஞானவேல்ராஜா விவகாரம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


ஆனால் புகைப்படம் தொடர்பாக வெளியான தகவலில், வாடிவாசல் படம் தொடர்பாக இருவரும் சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை தழுவி இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் முன்னோட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமீர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 


ஆனால் பருத்திவீரன் பிரச்சினை சென்று கொண்டிருக்கும் நிலையில், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அமீர் அப்படத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது.