தயாரிப்பு நிறுவனத்தை மூடும் வெற்றிமாறன்
திரைப்பட தயாரிப்பில் இருந்து விலகுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை வெற்றிமாறன் தயாரித்து வந்தார். தனுஷின் வண்டர்பாஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து விசாரணை , காக்கா முட்டை , வடசென்னை போன்ற படங்களை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். தற்போது அவர் தயாரித்துள்ள பேட் கேர்ல் திரைப்பட வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் வெற்றிமாறன் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி சார்பாக இனிமேல் திரைப்படங்களை தயாரிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
" என்னைப் போன்றவர்கள் படங்களை தயாரிப்பது என்பது சுலபமானது இல்லை. படங்களை இயக்குவது சுதந்திரத்தை அளிக்கிறது. ஆனால் திரைப்பட தயாரிப்பு என்பது மிகவும் அழுத்தம் நிறைந்த வேலை என்பதால் இனிமேல் தான் படங்களை தயாரிக்கப் போவதில்லை " வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்
மனுஷி
வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. ஆட்சேபகரமான 37 காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியும் என சென்சார் வாரியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் வெற்றிமாறன். மனுஷி படத்தை பார்வையிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கியப்பின் மீண்டும் சென்சார் சான்றியழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் விளைவாகவே வெற்றிமாறன் பட தயாரிப்பில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.