ரட்சகன், ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி நேற்று குழந்தை C/O கவுண்டம்பாளையம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவின் தளர்ச்சிக்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித்தின் வளர்ச்சி காரணம் என அவர் கூறிய நிலையில்,  இதற்கு வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். முன்னதாக திருநெல்வேலிக்கு வருகை தந்த இயக்குநர் வெற்றிமாறனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் பேசியதாவது: 


அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்


“உயிர் தமிழுக்கு படத்தை அமீருக்காக பார்க்கலாம். அரசியல் பகடி கதைகளத்தில் இப்படத்தினை கடின உழைப்புக்குப் பிறகு செய்துள்ளார்கள். இன்றைய அரசியல் சூழலை அவர்கள் நையாண்டி செய்துள்ள நிறைய விஷயத்தை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. சீரியஸாக பார்த்து தெரிந்த, அமீர் ஃபன்னாக ஒரு ரோல் செய்துள்ளார். நடிகரா அவருக்கு இது ஸ்பெஷலான படம்” எனப் பேசினார்.


“தொடர்ந்து பழையதைப் பேசி, சாதியப் படங்கள் எடுக்கிறார்கள் என இயக்குநர் பேரரசு நேற்று கூறியுள்ளார்.  இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்குப் பின் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்துள்ளது என இயக்குநர் பிரவீன் காந்தி கூறியுள்ளார். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என இயக்குநர் வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.


இந்தியா முழுக்க சாதிய கொடுமை உள்ளது


இதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “நான் அந்தப் பேட்டியைப் பார்க்கவில்லை. இதற்கு எனக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் சாதியரீதியான ஒடுக்குமுறை இன்று இல்லை என்றோ, சமூக ஏற்றத்தாழ்வு இல்லை என்றோ ஒருவர் சொல்கிறார் என்றால், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதியக் கொடுமைகள் இருந்து கொண்டு தான் உள்ளது” என்றார்.


மேலும், “விடுதலை 2 ஷூட்டிங் தற்போது சென்று கொண்டு தான் உள்ளது. அதற்காகத் தான் இங்கு வந்துள்ளோம். இன்னும் 15 முதல் 20 நாள்கள் ஷூட்டிங் உள்ளது. முடிந்தபின் படம் ரிலீஸ் பணிகள் தொடங்கும். விடுதலை 2 படம் முடிந்ததும் வாடிவாசல் படப்பணிகள் தொடங்கும். இயக்குநர் அமீரை ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரித்தார்கள். அது முடிந்து படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமீர் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்”  எனப் பேசியுள்ளார். 


பிரவீன் காந்தியின் பேச்சு


நேற்று நடைபெற்ற குழந்தை C/O கவுண்டம்பாளையம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் “நான் சாதி படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு எதிராக எப்போதும் ஸ்டேட்மெண்ட் கொடுப்பேன். சினிமாவில் சாதியைப் பற்றி பேசவே கூடாது. பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் போன்ற இயக்குநர்கள் வளர்ச்சி கண்ட பின் தான் சினிமா தளர்ச்சி ஆகிப்போய்விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவன் ஒதுக்கப்பட வேண்டியவன்” என இயக்குநர் பிரவீன் காந்தி ஆக்ரோஷமாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.