நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண் குறித்த தகவல்கள் உண்மையில்லை என இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். 


தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் வெங்கட் பிரபுவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் அவர் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார். அதேசமயம் பிரேம்ஜியும் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை கொண்டு திரையுலகில் இயங்கி வருகிறார். 45 வயதாகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. 


இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது. பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் கல்யாணம் பற்றி கேட்பதே பலரின் பணியாக இருந்தது. இந்த நிலையில் அந்த பத்திரிக்கை வைரலானது. 


இந்நிலையில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும் அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார் -சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா? இதை எல்லாவற்றையும் விட "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்கனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!


இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!. BTW, The Goat அப்டேட் விரைவில்..!" என தெரிவித்துள்ளார்.