தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று பெற்றுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி
தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 14,41,378 வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கினை, சென்னை குரோம்பேட்டை எம் .ஐ .டி கல்லூரி வளாகத்தில் நேற்று எண்ணப்பட்டது.
இதில் திமுக வேட்பாளர் டி.ஆர் .பாலு 7 லட்சத்து 58 ஆயிரத்து 611 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2 லட்சத்து 71 ஆயிரத்து 581 வாக்குகளும் பெற்றனர். இதில் அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை விட திமுக வேட்பாளர் டி. ஆர் . பாலு 4 லட்சத்து 87 ஆயிரத்து 029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. ஆர். பாலுக்கு தேர்தல் பொது பார்வையாளர், அபிஷேக் சந்திரா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அருண்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி ஆர் பாலு கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40/40 வெற்றி பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி, பல எழுத்துக்கணிப்புகளை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டாலும் அதனால் உங்கள் மீது வருத்தம் இல்லை. முதலமைச்சர் டெல்லி செல்கிறார் நானும் செல்கிறேன், மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறோம், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பேசி நல்ல ஒரு அறிவிப்பை தெரிவிப்பார்கள் கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். இதுவரை 7 முறை நாடாளுமன்றத்திற்கும் ஒரு முறை மேல் சபைக்கும் சென்றுள்ளேன் மிக்க மகிழ்சி என்றார்.
ஷாக் அளித்த மக்களவை தேர்தல் முடிவுகள்:
நாடு முழுவதுமுள்ள மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட இந்த முறை சுமார் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
அதாவது தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. அதேநேரம், பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 290+ இடங்களில் முன்னிலை வகிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230+ இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கூட்டணிகளுக்குமே சுமார் 60 இடங்கள் தான் வித்தியாசம் உள்ளன. இதனால், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.