இயக்குநர் வசந்தபாலன் இயக்கியிருக்கும் அநீதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து வசந்தபாலன் என்ன சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
அர்ஜுன் தாஸ் ரகுவரன் மாதிரி...
அநீதி படத்தில் அர்ஜுன் தாஸை முக்கிய கதாபாத்திரமாக தேர்வுசெய்ததற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார். அது என்ன வென்றால் “தமிழ் சினிமாவில் கம்பீரமான குரல் வளம் கொண்ட ஒரு நடிகர் என்றால் ரகுவரனைச் சொல்லலாம். தமிழில் ஒரு இங்கிலீஷ் நடிகர் என்று ரகுவரனைச் குறிப்பிடலாம். அவருக்கு அடுத்ததாக குரல் வளத்துடன் இருக்கக் கூடிய ஒரு நடிகர் என்றால் அர்ஜுன் தாஸை சொல்லலாம். அநீதி படத்தின் கதைக்கு ஒரு கோபக்கார இளைஞன் கதாபாத்திரம் தேவைப்பட்டது. அதற்கு நடிப்பு மட்டுமில்லாமல் குரலும் முக்கியமானதாக இருந்தது. அர்ஜுன் தாஸின் குரல் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் குரல். அவர் மேடையில் நின்று வணக்கம் என்று ஒரு வார்த்தை பேசுவதை கேட்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
என்னுடைய கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸ் மிகச் சரியாக இருப்பார் என்று தோன்றியது அதன் காரணத்தினால் தான் அவரை தேர்வு செய்தேன்” என்று வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை நம்பினார் ஜீ.வி.பிரகாஷ்
சுதா கொங்காரா இயக்கும் அடுத்தப் படத்தின் இசையமைக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இது அவரது 100 ஆவது படம். ஜி.வி.பிரகாஷ் முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகியது வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அநீதி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவர் குறித்து வசந்தபாலன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா. “நான் ஒரு பதினேழு வயது இளைஞனாக ஜீ.வி.பிரகாஷ் குமாரை சந்தித்தேன். ஒருவரை முதல் முறையாக பார்க்கும்போதே அவர் எவ்வளவு உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம். வெயில் படத்திற்காக வெயிலோடு விளையாடிப் பாடலை கேட்டபோதே இந்த இளைஞன் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது. நான் நம்பினேன் என்பதை விட தன்னைத்தானே நம்பினார் ஜீ.வி. அவருக்கு அவரது திறமைமேல் நம்பிக்கை இருந்தது. மனிரத்னம் ஏ.ஆர். ரஹ்மானை அறிமுகப்படுத்தியதுபோல் என்னுடைய படத்தில் நான் ஜீ.வி பிரகாஷ் மாதிரியான ஒரு கலைஞரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்” என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
அநீதி
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் அநீதி. வசந்தபாலன் இயக்கி ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அநீதி