தன் மீது மோசடி புகார் சொன்ன வழக்கறிஞர் கிருபா முனுசாமி எழுதியதாக கடிதம் ஒன்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் பகிர்ந்துள்ளார். 


திருமாவளவனுக்கு கடிதம் 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவர் மீது மத்திய அரசின் உதவியுடன் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வரும் கிருபா முனுசாமி என்பவர் மோசடி புகார் அளித்தார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், விக்ரமன் குறித்த பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னை சாதிய ரீதியாக அவமானப்படுத்தி,  மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 


மீண்டும் விக்ரமன் மீது புகார் 


இந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் கிருபா முனுசாமி நேற்றைய தினம் விக்ரமன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார்.  ‘ஒருமுறை என்னிடம் செய்யும் அரசியல், பண மோசடி தொடர்பாக நான் கேள்வி கேட்டேன். விக்ரமன் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்தார்.நான் அவரை விட்டு விலகும் நேரத்தில் எல்லாம் மன்னிப்பு கேட்டு சரியாக நடப்பாதாக கூறுவார். ஆனால் அவர் மாறவே இல்லை. தன்னுடைய மேனேஜர் என சொல்லும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தார்.


அவர் மீது புகாரளிக்க போவதாக கூறினேன். தனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளதாக மிரட்டினார் என சில ஸ்கிரீன் ஷாட்டுகளை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலானது. பலரும் விக்ரமன் என்ன பதில் சொல்லப்போகிறார் என கேள்வியெழுப்பினர். 


விளக்கம் கொடுத்த விக்ரமன் 


இந்நிலையில், “கிருபா முனுசாமி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே இந்தக் கதைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.  இந்தப் பிரச்சினையில் ஒரே ஒரு நபர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார், அது நான்தான். நாங்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமானோம். கிருபா முனைவர் பட்டத்திற்காக இங்கிலாந்திற்கு பயணப்பட்ட பிறகு ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். எங்களுடைய உறவு நட்பு ரீதியானது. இப்போது கூறப்படும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும், எனது அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கை முடிக்கவும் செய்யப்படுகின்றன. 


அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கைக்கு நான் அடிபணிய மறுத்துவிட்டேன். கீழே நான் பதிவிட்டுள்ள கடிதப் பக்கங்கள் கிருபா 2022 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பிஎச்டி படிக்கும் போது எழுதிய கடிதம். நான் உண்மையில் ஒரு துஷ்பிரயோகம் செய்பவராக இருந்திருந்தால், நியாயமான புத்திசாலித்தனமான எந்தவொரு நபரும் இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்க மாட்டார்கள்.


இரண்டாவதாக எழுதப்பட்ட கடிதம் கிருபா அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில், எனது தொழில்முறை நோக்கங்களுக்காக எனது வேண்டுகோளின் பேரில் அவர் வழங்கிய கட்டுரைகளுக்கு பணம் செலுத்தியதற்கான ஆதாரமாகும். எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டுரைகளுக்கு பணம் கொடுப்பதாக நான் உறுதியளித்திருந்தேன். மேலும் நான் உறுதியளித்தபடி முழுத் தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டேன். என் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் முற்றிலும் மறுக்கிறேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அறம்வெல்லும்” என விக்ரமன் ட்விட்டரில் நீண்ட பதிவின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். 


கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? 






விக்ரமன் பதிவிட்டுள்ள கடிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள்  கீழே கொடுப்பட்டுள்ளது. 


அன்பு விக்ரமனுக்கு, கண்ணியமிகு காதலன் என எழுத நினைச்சேன். சில சமயம் உன்கிட்ட ரொமன்டிக்  ஆக பேசும்போது குணா படத்துல கமல் அபிராமியை கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்கிற அதே உணர்வு. உனக்கும் என் மேல காதல் இல்ல. நமக்குள்ள நடந்த உரையாடல்கள் அனைத்தும் அரசியல் பற்றி தான் இருந்தது. ஆனால் பர்சனல், எதிர்காலம் பற்றியோ ஒரு நாளும் பேசினது கிடையாது. உன்னோட நெருக்கமா உணர என்ன வழின்னு தெரியல. இந்த மன போராட்டம் சில நேரம் விரக்தியா இருக்குது. 


குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு பாடல் வரிகளை உனக்கு பாடி காட்டணும்ன்னு ஆசை. இந்த மாதிரி உனக்கு தோன்றுமா? அரசியலை தவிர்த்த விக்ரமன் எப்படி இருப்பான்? உன்னை கட்டாயப்படுத்தவோ, கஷ்டப்படுத்தவோ விரும்பவில்லை. உன்கூட இருந்தாலும், இல்லைன்னாலும் அதை நெனச்சு சந்தோசப்படுவேன்” என எழுதப்பட்டுள்ளது.