வசந்தபாலன்
வெயில், அங்காடித் தெரு, ஜெயில், அநீதி எனத் தொடர்ச்சியாக எளிய மனிதர்களை தன் படங்களின் நாயகர்களாக வைத்து கதை சொல்லி வருகிறார் வசந்தபாலன். காவியத் தலைவன், அரவான் உள்ளிட்ட வரலாற்று பின்ணிகள் கொண்ட படங்களையும் இயக்கியுள்ளார். சமீப காலத்தில் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் மற்றும் அநீதி ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் களமிறங்கியிருக்கிறார் வசந்தபாலன்.
ஜீ ஃபைவ் நிறுவனம் தயாரித்து வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் வெப் சீரீஸ் ‘தலைமைச் செயலகம்’. ஜெயமோகனின் கதைக்கு வசந்தபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், நந்தா குப்தா, சாரா பிளாக் சித்தார்த் விபின், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தலைமைச் செயலகம் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைமைச் செயலகம் படத்துக்கான ப்ரோமோஷன்களின் போது சமீபத்தில் வெளியான ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேஷம் படத்தையும் ஃபகத் ஃபாசிலையும் வசந்தபாலன் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பத்து தல ராவணன் மாதிரி நடிக்கிறார் ஃபகத் ஃபாசில்
இந்த வீடியோவில் வசந்தபாலன் “ சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேஷம் படத்தை ரொம்ப ஆசையாக திரையரங்கத்திற்கு சென்று பார்த்தேன். மிகச் சாதாரணமான ஒரு திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஃபகத் ஃபாசில். ஒல்லியான ஒரு தேகத்தை வைத்துக் கொண்டு பத்து தல ராவணன் மாதிரி நடிக்கிறார். ஃபகத் ஃபாசில் நடித்தாலே அந்தப் படத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார். எந்த ரோல் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்கிறார். ஆவேஷம் படத்தின் வெற்றிக்கு ஃபகத் ஃபாசிலுக்கு நடிப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது” என்று வசந்தபாலன் கூறியுள்ளார்.
ஆவேஷம் படம் கடந்த மே 9 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியது. திரையரங்கத்தில் ரூ.125 கோடி வசூல் செய்த இப்படம் தற்போது ஓடிடியில் வைரலாகி வருகிறது.