ஜேம்ஸ் வசந்தன்
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பொதுமக்களிடையே நன்கு அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதேநேரம், கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் இசை கற்றுத்தரும் ஆசிரியராகவும் அவர் வேலை பார்த்தார். அந்த நேரத்தில் அவரிடம் படித்த சசிகுமாரின் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதைதொடர்ந்து, பசங்க, நாணயம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கும் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்தார்.
மட்டமான மனிதர்
தொடர்ச்சியாக இளையராஜாவின் கருத்துக்களையும் அவரது செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். நேர்காணல் ஒன்றில் இளையராஜா ஒரு மட்டமான மனிதர் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியதைத் தொடர்ந்து அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் இளையராஜா பாடல்கள் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவுக்கு கருத்து தெரிவித்திருந்தார் ஜேம்ஸ் வசந்தன். சித்ரா லட்சுமணன் உடனான சாய் வித் சித்ரா நேர்காணலில் இளையராஜாவை தான் விமர்சிப்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
இளையராஜா எனக்கு குரு
”ஒரு படைப்பாளனின் படைப்பை கொண்டாடுங்கள் அந்த படைப்பாளனுக்கு ரொம்ப நெருக்கமா செல்லாதீர்கள். அப்படி சென்றால் அந்த படைப்பாளியையும் அவனுடைய படைப்பையும் நீங்கள் வெறுக்கத் தொடங்கி விடுவீர்கள் என்று எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை தெரிவித்தார். இளையராஜாவின் இசை எனக்கு அவ்வளவு பெரிய உந்துதலாக இருந்திருக்கிறது. ஆனால் அவருடைய இசையை மட்டும் ரசிக்காமல் நான் அவருக்கு ரொம்ப நெருக்கமாக சென்றுவிட்டேன். அதனால் தான் அவருடைய கருத்துக்கள் என்னை அதிகம் சீண்டிவிட்டன. நான் பார்த்து வியந்த ஒரு மனிதர் சக மனிதர்களை நடத்தும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் அவரது கருத்துக்களையும் அவரது செயல்களையும் எதிர்த்து பேசுகிறேன்.
அந்த ஆவேசத்தில் தான் இளையராஜா ஒரு மட்டமான மனிதர் என்று நான் பேசிவிட்டேன். இளையராஜாவின் கருத்துக்கள் உடன் உடன்படவில்லை என்றாலும் இசையில் இளையராஜா தான் எனக்கு குரு. இளையராஜாவைக் காட்டிலும் கருத்தியல் ரீதியாக ரஹ்மானுடன் என்னால் ஒத்துப் போகமுடிகிறது.