அழகி படத்தின் வழியாகத்தான் மக்கள் வடதமிழகத்தின் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார்கள் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.


தங்கர் பச்சான்


கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தங்கர் பச்சான். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு கடந்துள்ள நிலையில் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கின்றன. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பா.ம.க கட்சி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்காக கடலூர் மாவட்டத்தில் பிரச்சார வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் அவர். நேற்று கடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய தங்கர் பச்சான் தமிழ் சினிமாவில் வட தமிழக மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசினார்.


வடதமிழக மக்கள் வாழ்க்கை சினிமாவில் இல்லை


இந்த நிகழ்வில் பேசிய தங்கர் பச்சான் ‘ சினிமா என்றால் தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி என்று தான் இருந்தது. ஒரு எளிய விவசாயியின் மகனாக இருந்து நான் சென்னை சென்றபோது என்னுடைய மக்களின் வாழ்க்கையை இவர்கள் யாரும் காட்டப் போவதில்லை என்பதை புரிந்துகொண்டேன். நான் நினைத்திருந்தால் ஒளிப்பதிவாளராக மட்டுமே இருந்திருக்கலாம். எனக்கு தேவைக்கு அதிகமான சம்பளம் அதில் கிடைத்தது.


என் மக்கள் அவர்களின் வாழ்க்கை அவர்களின் தொழில் என எல்லாவற்றையும் சினிமாவில் சொல்ல நான் முடிவு செய்தேன். அழகி படம் தான் முதல் முதலில் வடதமிழக மக்களின் வாழ்க்கையை முதல் முதலில் சினிமாவில் காட்டியது. 100க்கும் மேற்பட்ட திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் அழகி படம் ஓடியது. அழகி படம் பார்த்தப் பின் தான் நெய்வேலி, கடலூர் மாதிரியாக ஊர்களில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மக்கள் பார்த்து தெரிந்துகொண்டார்கள்.


சாதரணாமாக தெருவில் நடந்துபோகும் ஒருவனைப் போல் இருக்க வேண்டும் என்பதற்காகதான் சேரனை என்னுடைய படத்தில் நடிக்க வைத்தேன். இன்று வரை நான் என்னுடைய கதைகள் என் ஊரையும் என் மக்களையும் தான் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் என் மக்களின் வாழ்க்கை மறைக்கப் பட்டது மாதிரிதான் என் மக்களின் அரசியலும் மறைக்கப் பட்டிருக்கிறது” என்று கூறினார்






தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ் நடித்த அழகி படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது குறிப்பிடத் தக்கது.