தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.




தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் கலைஞர் அரங்கம் முன்புள்ள கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.




திமுக இல்லாமல் போய்விடும் சொன்ன பல பேர் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள்


அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு கனிமொழி பேசும்போது, தூத்துக்குடி எனக்கு இரண்டாவது தாய் வீடாகும். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடி தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்வதோடு, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மழை வெள்ளத்தால் மக்கள் துயருற்ற நேரத்தில் வராத பிரதமர் மோடி தற்போது அடிக்கடி வருகிறார். இங்கே வரும்போதெல்லாம் திமுக இல்லாமல் போய்விடும் என கூறுகிறார். இவ்வாறு சொன்ன பல பேர் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள் என்பது தான் வரலாறு. ஆனால், திமுக இன்று திராவிட மாடல் ஆட்சியாக மாறியிருக்கிறது.




பாடம் புகட்ட வேண்டும்


மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் போது பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65, கேஸ் விலை ரூ.500 ஆக குறையும். மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவு திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். எனவே, மக்கள் எனக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து தேரடி, பள்ளிவாசல், PPMT ஜங்ஷன், சுமங்கலி கல்யாண மண்டபம், பக்கிள்புரம், சிதம்பர நகர், உருண்டையம்மன் கோவில், திரேஸ்புரம் சந்திப்பு, மட்டக்கடை ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து, நம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர் எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவும், அதற்குத் துணை போன அதிமுகவும் தமிழ்மக்களுக்குச் செய்த துரோகங்களுக்குப் பாடம் புகட்டும் விதத்தில் இத்தேர்தல் அமைய வேண்டுமென பேசினார். தொடர்ந்து அவர், மாரியம்மன் கோயில், டிஎம்சி காலனி சந்திப்பு, 2ஆம் கேட், மட்டக்கடை உள்பட பல்வேறு பகுதிகளிலும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இதில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.