தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களை வரிசைப் படுத்தினால் அதில் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு இடம் உண்டு. அவர் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியது இணையவாசிகளிடம் கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர் பேசியுள்ளதாவது, ”தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை மேடையில் மட்டுமே புகழ்ந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் எழுதுவது அவர்களை பாராட்டுவதற்காக அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான அரசியல் இல்லை, நிலம் இல்லை வளம் இல்லை. தமிழ்ச் சங்கங்கள் இன்னும் ஒரு 25 ஆண்டுகளில் ஆங்கிலத்தில்தான் தமிழ் குறித்து பேசிக்கொண்டு இருப்பார்கள். இன்றைக்கு யாருமே தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பது இல்லை. இன்றைக்கு யாராவது தமிழில் இரண்டு நிமிடம் மற்ற மொழி வார்த்தை கலக்காமல் பேச முடியுமா, யாராவது தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? இப்படியான நிகழ்வில்தான் தமிழ் குறித்து பேசுவோம். அதன்பின்னர் மீண்டும் அவரவர் வேலையைப் போய் பார்க்கச் சென்றுவிடுவோம்.
நமக்கெல்லாம் கல்வி என்பது 5 முதல் 10 பேர் இணைந்து உருவாக்குகின்ற பாடத்திட்டத்தினை ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு படித்து வாந்தி எடுக்கின்றனர். அதன் பின்னர் ஒரு சான்றிதழ் வாங்குவது மற்றும் வேலை வாங்குவதுதான் நோக்கமாக உள்ளது. கல்வி என்பது அதுவா? நான் எனது கல்லூரி படிப்புவரை என்ன படித்தேன் என்பது இதுவரை தெரியவில்லை. மதிப்பெண்களுக்காகத்தான் படித்தேன். இங்கு யாருமே தனது குழந்தை அறிவாளி ஆகவேண்டும் என பள்ளியில் சேர்ப்பது இல்லை. மதிப்பெண்களுக்காகத்தான் சேர்க்கின்றோம். இது கல்வியே இல்லை. கோயில் என்றும் கடவுள் என்றும் எதையெதையோ சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். அவையெல்லாம் கோவில் இல்லை. படைப்பாளிகள்தான் கடவுள். எழுத்தாளர்களுக்குத்தான் சமூகத்தைப் பற்றிய அக்கறை, கோபம், கவலை இருக்கும். திருக்குறள் என்பது திருவள்ளுவரின் அறிவாற்றல் மாத்திரம் அல்ல, திருவள்ளுவரின் பெருமை மாத்திரமல்ல. எவ்வாறான வாழ்க்கையை தமிழன் வாழ்ந்திருக்கின்றான் என்பது தெரிகின்றது.
அப்படிப்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றோம்? ஆண்டுதோறும் அரசு சிறந்த நூலினை தேர்வு செய்து விருது தருகின்றது. ஆனால் அவ்வகையான நூல்கள் எத்தனை விற்பனையாகும்? 500 நூல்கள் விற்பனையானால் கூட ஆச்சரியம்தான். இது நமக்குதான் வெட்கமும் கேவலமும். ஆனால் நாம் அனைவரும் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றோம். கைத்தட்டல்களை எழுப்பும் பேச்சு நமக்குத் தேவையில்லை. சிந்தனையைத் தட்டவேண்டும். இன்றைக்கு யாரும் இதனை சொல்லிக்கொடுப்பதற்கு இல்லை. இன்றைக்கு ஆசிரியர்கள் எல்லாம் ஊழியர்களாக மாறிவிட்டனர். இன்றைக்கு ஆசிரியர்கள் விடுமுறைக்காகவும் மேற்கொண்டு ஊதியத்திற்காகவும்தான் போராடுகின்றனர்.
யாரை நம்பி அடுத்த தலைமுறை உள்ளது. இன்றைக்கு தனது தாய் மொழியில் சிந்திக்க முடியாத கூட்டத்தினை உருவாக்கிவிட்டனர். எவ்வளவு காலத்திற்கு தமிழ் பெருமையை பேசப்போகின்றோம். கீழடி ஆய்வினை வைத்து என்ன செய்யப்போகின்றோம்” என மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.