பண்ருட்டி அருகே இரண்டு ஆண்டுகள் காதலித்து விட்டு, காதலி நான்கு மாத கர்ப்பமான பிறகு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காவல் நிலையம் அருகில் கோவிலில் வைத்து காவல்துறையினர் திருமணம் செய்து வைத்தனர்.

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகள் அபிநயா (19). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அரி(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் இரண்டு ஆண்டுகளாக ஊர் சுற்றியும், உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

 

இதனிடையே அபிநயா 4 மாத கர்ப்பமடைந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் அரியிடம் கேட்டுள்ளார். இதற்கு காதலன் அரி மறுப்பு தெரிவித்து, கர்ப்பத்தை கலைத்து விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்வேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா தான் ஏமாற்றப்பட்டதை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அபிநயா தனது பெற்றோருடன் சென்று பண்ருட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் காதலனை சேர்த்து வைக்கும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் அரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அரி அபிநயாவை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

 

உடனடியாக போலீசார் அருகில் இருந்த முத்து மாரியம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலுடன் மகளிர் போலீசார் திருமணம் செய்து வைத்த சம்பவம் பண்ருட்டியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.