வணிகமாக பார்த்தவர்கள் கையில் தான் இப்போது சினிமா சிக்கிக் கொண்டுள்ளது என பட விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் குற்றம் சாட்டியுள்ளார். 


பிரபல சித்த மருத்துவர் வீரபாகு, நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘முடக்கருத்தான்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.சிற்பி இசையமைக்கும் இந்த படத்திற்கு பழநி பாரதி பாடல்களை எழுதுகிறார். மேலும் அருள்செல்வன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள, ஆகாஷ் படத்தொகுப்பாளராகிறார். இதில் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், இயக்குநர் தங்கர் பச்சான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 


இந்நிகழ்சியில் பேசிய தங்கர் பச்சான், “இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறுவது படம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும், எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காக தான். எல்லா படத்துக்கும் இப்படி நிகழ்வுகள் நடந்தாலும், அனைத்து படங்களையும் மக்கள் பார்ப்பதில்லை. வீரபாபு போன்ற ஒருவர் சினிமாவுக்குள் வரணுமா என நினைத்தவர்களில் நானும் ஒருவன். அவரை போன்ற ஒரு ஆளை எந்த கல்வி நிறுவனத்தாலோ உருவாக்க முடியாது. 


திரைப்பட கலை கண்டுபிடிக்கப்பட்டதே மக்களை மேன்மைபடுத்தவும்,முன்னேற்றத்திற்காகவும் தான். ஆனால் இன்றைக்கு அந்த கலை அப்படி இருக்கிறதா? என்றால் அது கேள்வியாகவே உள்ளது. சினிமாவை கலையா பார்த்தவர்களிடம் கலையாகவே உள்ளது. வணிகமாக பார்த்தவர்கள் கையில் தான் இப்போது சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் கலையாக நினைப்பவர்களுக்கு இங்கு வேலையில்லை. நல்ல படங்களை பாருங்கள் என சொன்னால் நம்மை ஒருமாதிரி பார்க்கிறார்கள். பார்க்கவே கூடாது என சொல்கிறார்களோ அதை தேடி பார்ப்பதில் முதன்மையானவர் தமிழர்கள். 


ஒரு 4,5 நடிகர்களுக்காகவும், நிறுவனங்களுக்காகவும் மட்டுமே தமிழ் சினிமா இயங்கி கொண்டுள்ளது. இதற்கிடையே முடக்கருத்தான் படம் என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. இன்றைக்கு ஒரு கொலையை பார்த்து ரசிக்கும் அளவுக்கு மக்களை கொண்டு வந்துவிட்டார்கள். அதிக கொலை செய்யும் நடிகருக்கும், இயக்குநருக்கும் தான் அதிக சம்பளம் என்ற நிலை உள்ளது. இப்படி ஒரு படம் எடுத்தவரும்,பார்ப்பவரும், நடிக்கிறவரும் தான் கொலைகாரர்கள். சினிமா வந்து கலை. அது ஒருவரின் வாழ்க்கையை மாற்றி விடும்.  


உலகத்தில் எங்கேயுமே ஒரு திரைப்படத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் எங்கேயுமே இல்லை. ஒரு சினிமாவை கொள்ளையடிக்கும் தொழிலாக வைத்து விட்டு, மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைக்கிற கூட்டம் தமிழ்நாட்டில் தான் இருக்குது. இது மிகப்பெரிய குற்றம் இல்லையா?” என தெரிவித்துள்ளார்.