பணத்தை மட்டுமே குறிவைத்து மிகவும் மலிவான படங்களை திரையுலகம் தந்து கொண்டிருக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 


கொரோனா காலத்தில் மக்களிடையே அதிகளவில் பிரபலமான சித்த மருத்துவர் வீரபாபு, நடிகராக அறிமுகமாகியுளார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘முடக்கருத்தான்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


அவர் பேசுகையில்., “சினிமாவிற்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. பொதுவாக திரையுலக விழாக்களில் என்னை காண முடியாது. சமீப காலமாக வெளியாகும் திரைப்படங்கள் மீது எனக்கு வருத்தமும், கோபமும் உண்டு. இன்றைய படங்களை பார்த்தால் ஒவ்வொரு தமிழனும் புலம்பி ஆக வேண்டும். எந்த வித சமூக கோட்பாடு, தார்மீக நெறிமுறைகளுக்கு உட்படாமல் பணத்தை மட்டுமே குறிவைத்து மிகவும் மலிவான படங்களை திரையுலகம் தந்து கொண்டிருக்கிறது, 


நான் சிறுவனாக இருந்தபோது அம்மா என்னை படம் பார்க்க அழைத்து செல்வார். சிவாஜி, சாவித்திரி படங்கள் இருந்தால் கண்டிப்பான என்னையும் பார்க்க செய்வார். பாசமலர் படத்தை பார்க்கும் போது ஆழமான அண்ணன் - தங்கை உறவு, சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய பாவ மன்னிப்பு ஆகியவை எல்லாம் எப்பேர்ப்பட்ட படங்கள். இன்றைக்கு காதல் பாடல்கள் காட்சிகளாக வரும்போது விரசத்தின் எல்லையில் போய் நிற்கின்றது. 


காட்சிக்குள் இருக்கும் தெய்வீகம் தான் புனிதம் செறிந்த காதல் காட்சிகளை இன்றைக்கு எங்கேயும் பார்க்க முடியாது. செவியை பிளக்க கூடிய சத்தமே இசையாகி விட்டது. அர்த்தமற்ற, கொச்சையான வார்த்தைகள் பாடல்களாகி விட்டது. வன்முறை மட்டுமே வாழ்வியலாகி விட்டது. இந்நிலையில் நான் இந்த சினிமா உலகம் பற்றி திரும்பி பார்க்காதவன். எனக்கு படங்கள், நடிகர்கள் மேலே எந்த கோபமும் கிடையாது. 


இன்னைக்கு 300, 400 கோடி பணம் போட்டு படம் எடுத்தா தான் தியேட்டருக்கே வருது. நான் ரஜினியிடமே சொல்லிட்டு தான் வந்தேன். நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும் நடியுங்கள். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேய் மாதிரி நடிக்க பாருங்க என சொன்னேன். அன்னைக்கு எடுத்த படங்கள் எல்லாம் ஆயிரம் கோடி பட்ஜெட்டிலா எடுத்தார்கள்? 


விஜய் நடித்ததில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்கள் பிறகு தான் அவர் ஸ்டார் நடிகரானார். வன்முறை காட்சிகள் எல்லாம் வைக்காதீர்கள். சினிமா மேல் ஈடுபாடு இருப்பதால் தான் எனக்கு கோபம் இருக்கிறது. படிக்காதவர்களிடம் கூட பாதிப்பு ஏற்படுத்துவது சினிமா தான். நடிகர்கள் எல்லாம் ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறார்களே, அதில் ரூ.10 கோடி ஏழை, எளிய மக்கள் பயனுக்கு கொடுத்தால் உலகம் பாராட்டுமே என வீரபாபு சொன்னார். அவர் இப்படத்தால் வரும் வருமானத்தில் அப்படி உதவுவார் என நம்புகிறேன்” என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.