பருத்திவீரன் மாதிரி ஒரு படத்தை கார்த்தி பண்ணினால் நான் சினிமாவை விட்டே போகிறேன் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். 


இயக்குநர் அமீரின் 3வது படமாக 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தில் கார்த்தி, பிரியாமணி, கஞ்சா கருப்பு, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. தேசிய விருது, மாநில விருது என பல விருதுகளை வென்ற பருத்தி வீரன் படம் அந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு அடையாளமாக மாறியது. 


இப்படியான நிலையில் பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை வெடித்துள்ளது. அதாவது 16 ஆண்டுகாலம் புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சினை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் அப்படத்தில் டக்ளஸ் கேரக்டரில் நடித்த கஞ்சா கருப்பு நடந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். 


அதில், “தமிழ்நாட்டில் கார்த்தியை யாருக்கு தெரியும். அமீர் என்பவர் படம் பண்ணியதால் தான் அவரை எல்லாருக்கும் தெரியும். 30 நாட்கள் வெயிலிலும், மழையிலும் நிற்க வச்சி அந்த கேரக்டரை உருவாக்கியவர் அமீர் தான். பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களும் ஞானவேல்ராஜாவை நம்பியா வந்தார்கள். அமீருக்காக தான் வந்தார்கள். பருத்திவீரன் படத்தால் எந்த வகையில் நஷ்டம் என சொல்கிறீர்கள்?. அமீரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் தான் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள். 


உனக்கு அறிவு வேண்டாமா? . நீதானே படம் எடுத்தாய். என்னால் படம் பண்ண முடியவில்லை, தப்பா நினைக்காதீங்கன்னு சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?. அமீர் எப்படி பொய் கணக்கு காட்டப் போகிறார். ரம்ஜான் நோன்பு காலத்தில் கூட படப்பிடிப்பில் தான் இருந்தார். ஒரு இஸ்லாமியர் எப்படி பொய் சொல்வார். சிவகுமார் அமீரிடம் கார்த்தியை ஒப்படைத்தது உண்மை தான். 


இன்னைக்கு கார்த்தி, சூர்யா எல்லாம் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள். அதில் ஒரு கோடி கொடுக்க வேண்டிதானே? அவர்கள் பேசி இந்த பிரச்சினையை முடிக்க வேண்டிதானே? . அப்படி இருந்தால் பிரச்சினை வளர்ந்திருக்குமா?. இன்னைக்கு கார்த்தி ஏதேனும் நிகழ்ச்சிக்கு போனா என்ன மாமா சௌக்கியமா என்று தான் பேசுகிறார். அது யார் கொடுத்தது? அமீர் தான். மேலும் மீதி படத்தை எடுக்க சசிகுமார் தான் பணம் கொடுத்தார். அதற்காக மதுரை ஏரியாவை கொடுத்தார். அதையும் கைப்பற்ற ஞானவேல் தரப்பு முயன்றது.


அதேசமயம் அமீர் எப்பவும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார். நான் அவருக்கு கால் செருப்பாக தான் இன்றைக்கும் இருப்பேன். பருத்திவீரன் படத்தை பெரிய படமாக மாற்றினார். கார்த்தியை அந்த படம் மாதிரி ஒரு படம் பண்ண சொல்லுங்கள். நான் சினிமாவை விட்டே போகிறேன்” என அந்த நேர்காணலில் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.