நடிகர் சரத்குமார் நடித்த மாயி படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


1996 ஆம் ஆண்டு ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான “மாணிக்கம்” படத்தை இயக்கி திரையுலகில் இயக்குநரானார் சூர்ய பிரகாஷ். அப்படத்தை தொடர்ந்து பிரபுவை வைத்து பெண் ஒன்று கண்டேன் படத்தை இயக்கிய நிலையில், 2000 ஆம் ஆண்டு சரத்குமாரை வைத்து “மாயி” படத்தை இயக்கினார். இந்த படம் சூர்ய பிரகாஷூக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் மீண்டும் சரத்குமாரை வைத்து திவான் படத்தை எடுத்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு செல்லவில்லை. 






இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய சூர்ய பிரகாஷ் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவனை வைத்து அதிபர் என்ற படத்தை இயக்கினார். இதுவும் தோல்வியடைந்தது. இப்படியான நிலையில் சூர்ய பிரகாஷ் மாரடைப்பு காரணமாக காலமானார். இதனை நடிகர் சரத்குமார் எக்ஸ் வலைத்தளம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். 


அதில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.