நடிகை ஊர்வசி நடித்த ஜே.பேபி படம் ஏன் சரியாக செல்லவில்லை என்பதை தன்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி தெரிவித்துள்ளார். 


ஜே.பேபி படம்


நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் “ஜே.பேபி”. சுரேஷ் மாரி இயக்கி அறிமுக இயக்குநராக களம் கண்டார். இந்தp படத்தில் ஊர்வசி, தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஜே.பேபி படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை. 


குறுக்கே வந்த மஞ்சும்மல் பாய்ஸ்


ஜே.பேபி படம் மட்டுமல்ல, கடந்த இரு வாரங்களாக தமிழ் சினிமாவில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட ஓடவில்லை. அதற்கு காரணம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் தான். அப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவை சற்று ஆட்டம் காண வைத்துள்ளது. இதனிடையே தொடர்ந்து தேர்தல், தேர்வுகள் எல்லாம் சென்று கொண்டிருப்பதால் பெரிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 




இந்நிலையில் ஜே.பேபி படம்  ஓடாதது குறித்து அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரி நேர்காணல் ஒன்றில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், “என்னாலும் இந்த விஷயத்தை புரிந்துக் கொள்ள முடியல. தியேட்டரில் படம் பார்த்தவர்கள் எல்லாரும் குறை சொல்லவில்லை. சினிமா சார்ந்த மக்களுக்கு வேண்டுமானால் ஏதோ ஒரு விதத்தில் குறை தெரிந்திருக்கலாம். மனிதர்கள் உணர்வுகளுடன் ஜே.பேபி படம் நன்றாக பொருந்தி போயிருக்கிறது என உணர முடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை மகிழ்ச்சியாக பார்க்கிறார்கள். ஆனால் ஏன் ரசிகர்கள் வரவில்லை என தெரியவில்லை” என்றார்.


அப்போது மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டது குறித்தும், அதை எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்ததும் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்கள் ஒரு படத்தின் முடிவில் முக்கிய பங்கு வகிக்கிறதா?எனவும் கேட்கப்பட்டது. “சமூக வலைத்தளங்கள் சுமாரான விஷயத்தை கூட சூப்பராக மாற்றி பேசுபொருளாக்கியுள்ளது. பிடித்தால் கொண்டாடுவார்கள், பிடிக்காவிட்டால் கேவலமாகவும் பேச செய்வார்கள். ஒரு படத்துக்கான விளம்பரமாக சமூக வலைத்தளங்கள் இருக்கிறது. நான் ரசிகர்களின் எண்ணங்களை முடிவு செய்வது யாராலும் செய்ய முடியாது. நான் அடுத்ததாக 3 கதைகள் வைத்திருக்கிறேன். அதில் ஏதாவது ஒன்றை பண்ண முடிவு செய்துள்ளேன்” எனவும் சுரேஷ் மாரி கூறியுள்ளார்.