பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோயிலில் பங்குனி உத்திர முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
முருகன் திருக்கோவில்:
கோவிலில் சித்திரைத்திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி திருக்கார்த்திகைவின் முக்கிய விழாவான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், பங்குனி பிரமோற்சவம் விழாவில் தேரோட்டம், பிரதோஷ வழிபாடு, போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக் கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திர சோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது.
சிவன் கோயில்:
பாலசுப்பிரமணியர் கோவில் என்றவுடன் இது முருகன் கோவில் என்று அர்த்தமில்லை. இது ஒரு சிவன் கோவில் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் என்பதால் ராஜேந்திர சோழீஸ்வரர் என இங்குள்ள சிவபெருமான் புகழ்பெறுகிறார். தாயார் அறம் வளர்த்த நாயகி என்று புகழ்பெறுகிறார். ஒரே கோயிலில் தனித்தனியாக ஒவ்வொரு கொடிமரங்களுடன் சிவன், அம்பாள், முருகன் வள்ளி தெய்வானையுடனும் தனி தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர் தம்பதி சமேதராக சூரியன், சந்திரன், அதிகார நந்தி, கன்னிமூல கணபதி, லட்சுமி சரஸ்வதி, பாலதண்டாயுபாணி, ஏகாம்பரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள், ஜுரதேவர், பைரவர், 63 நாயன்மார்கள், ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.
கொடியேற்றம் நிகழ்வு:
இப்படி 1500 ஆண்டு பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்குனி உத்தர தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து அருள்மிகு பாலசுப்பிரமணியன் சுவாமிஜி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் கொடியை பூ பல்லாக்கில் வைத்து கோவிலை பலம் வந்து கொடி கம்பத்துக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மற்றும் கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒன்பது நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த மண்டகப்படி பூஜைகள் நடைபெறும் பின்னர் வருகின்ற 23ஆம் தேதி மாலை தேரோட்டம் விழா நடைபெற உள்ளது .இதில் கோவில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் ஜெயபிரதீப், சிதம்பரசூரியவேல் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்