நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய என்ன காரணம் என்பதை அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா படம் வெளியானது. இந்த படத்தில் மனீஷா கொய்ராலா ஹீரோயினாக நடிக்க,கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ்., ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்திருந்தனர். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இப்படம் அந்த காலக்கட்டத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. ரஜினியே இப்படத்தின் கதையை எழுதி தயாரித்திருந்தார்.
அவதார் பாபாஜியை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்ட நிலையில், ரஜினிக்கும் பாபாஜிக்குமான ஆன்மீக தொடர்பை ரசிகர்கள் முன்பே நன்கு அறிந்திருந்தனர். அதனால் பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நஷ்டம் அடைந்த விநியோகதஸ்தர்களுக்கும், தியேட்டர் ஓனர்களுக்கு ரஜினி நஷ்டஈடு வழங்கினார். அதேபோல பாபா படத்தால் பாமகவுக்கும் - ரஜினிக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் இன்றளவும் பாபா படத்தை நினைத்தாலே இத்தகைய சம்பவங்கள் கண்முன்னே வந்து செல்வது நிச்சயம்.
இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக சமீபத்தில் பாபா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுக்க முழுக்க பாபா படம் பற்றிய பேச்சு தான் உள்ளது. யூடியூப், ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் என எதிலும் இடம்பெறாத பாபா படம் ஏன் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்பதை அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேசிய சுரேஷ் கிருஷ்ணா, “ 10 நாட்களுக்கு முன்பு ரஜினி எனக்கு போன் செய்தார். நான் பாபா படத்தின் ஹார்ட் டிஸ்க் அனுப்புறேன் பாருங்க என சொன்னார். நானும் பதில் எதுவும் சொல்லாமல், திரும்பவும் நான் முழுவதுமாக பார்த்தேன். பின் 2 நாட்கள் கழித்து என்னை பார்த்து எப்படி இருந்துச்சு படம் என ரஜினி கேட்க, நான் அப்பவே பிடிச்ச படம் சார் என சொன்னேன். இப்படத்தை நான் ரீ-ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். நான் சூப்பர் ஐடியா என தெரிவித்தேன்.
அப்போது சுரேஷ் நீங்க ஒன்னு கவனிச்சீங்களா என ரஜினி கேட்டார். சமீபகாலமாக பேன்டசி படம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற பேன்டசி படங்களை சொல்லலாம். 2கே கிட்ஸ் தலைமுறையினர் இப்படத்தை பார்த்திருக்கவே மாட்டார்கள். 20 வருஷத்துக்கு முன்னாடி இப்படியான ஒரு பேன்டசி கதையை பண்ணுவதே அபூர்வமான நிலையில் நாங்கள் முயற்சித்தோம். கண்டிப்பா இப்ப பார்த்த புது வெர்ஷனா இருக்கும் என சொன்னேன்.
3 மணி நேரம் ஓடக்கூடிய பாபா படம் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டு தற்போதைய தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எந்த தப்புமே இல்லை.ஆனால் அன்றைக்கு எழுந்த சர்ச்சைகளால் உரிய அங்கீகாரம் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இப்ப பாபா படம் ரிலீஸ் செய்தால் நிச்சயம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும்” என சுரேஷ் கிருஷ்ணா அந்த நேர்காணலில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.