Sundar C: சுந்தர் சி சொன்ன அந்த வார்த்தை! தனக்கென தனியிடம் பிடித்த சந்தானம் - என்ன நடந்தது?

சந்தானம் மாதிரி கடினமான உழைப்பாளியை நான் பார்த்தது இல்லை என இயக்குநர் சுந்தர். சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சின்னத்திரை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து அதன்பின்பு இன்று நாயகனாக நடித்து வருபவர் சந்தானம். அவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

Continues below advertisement

ஒருநாள் கால்ஷீட் கேட்டு அலைந்த இயக்குநர்

அதில் பேசும் அவர், “தீயா வேலை செய்யணும் குமாரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். அப்போது என்னுடைய நண்பரான இயக்குநர் ஒருவர் தினமும் சந்தானத்தை பார்க்க வருகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த நான் ஆர்வம் தாங்காமல் சந்தானத்திடம் நேரடியாக அவர் தினமும் வருவதைப் பற்றி கேட்டேன்.

அதற்கு அவர், “இல்லை சார். ஒரே ஒருநாள் அவர் படத்துக்கு நான் தேதி கொடுக்க வேண்டும். ஆனால் சத்தியமாக சொல்கிறேன். அந்த ஒருநாள் கொடுக்க முடியாத மாதிரி இருக்கிறது” என கூறிவிட்டு, நீங்க சொன்னது மாதிரியே நடந்துவிட்டது என சொல்லி சந்தானம் என்னிடம் ஒரு பிளாஷ்பேக் கதையை சொல்கிறார். நான் என்ன சொன்னேன் என தெரியாமல் முழிக்கிறேன்.

பிளாஷ்பேக் சொன்ன சந்தானம்

நானும் சந்தானமும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது அப்போது அப்படத்தின் இயக்குநராக இருந்தவர் தான் இப்போது சந்தானத்தை தேடி வந்தவர். அந்த படத்தின்போது ஷூட்டிங் எனக்கு சாயங்காலம் 5 மணிக்கு தான் என்பதால் நான் வரும்போது சந்தானம் உட்கார்ந்து கொண்டிருந்தார். நான் அவரிடம், “என்ன ஷாட் எல்லாம் முடிஞ்சிதா?” என கேட்டேன். அதற்கு சந்தானம், “இல்லை சார். காலையில இருந்து உட்கார்ந்துட்டு இருக்கேன். இன்னும் ஒரு ஷாட் கூட வரல” என சொன்னேன். அப்போது நான் அந்த இயக்குநரிடம் சொன்னேன்.

“காலையில இருந்து சந்தானத்தை உட்கார வச்சிட்டு இருக்கீங்க. பின்னாடி ஒருநாள் கால்ஷீட்டுக்காக சந்தானத்திடம் அலைய வேண்டிய நிலை வரும்” என தெரிவித்திருக்கிறேன். இது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் சந்தானம் நியாபகம் வைத்து சொன்னார்.  “நீங்க சொன்னது நிஜமாகி விடக்கூடாது என நான் நினைத்திருக்கிறேன். ஆனால் முடியவில்லை” என அவர் என்னிடம் சொன்னார். சந்தானம் மாதிரி ஒரு உழைப்பாளியை நாம் பார்க்க முடியாது. ஷூட்டிங் வர்றோம், சீன் கொடுக்குறாங்க, நடிக்கிறோம் என இல்லாமல் அந்த படத்தில் கமிட்டானதில் இருந்து என்னுடைய உதவி இயக்குநர்களை நச்சரித்து சீன் பேப்பர் வாங்கி அவர் ஒரு 5 பேரை வைத்து சீன் எழுதி, அதில் ஹைலைட்டான விஷயங்களாக சுருக்கி எழுதுவாரு” என சுந்தர்.சி சந்தானத்தை புகழ்ந்து பேசியிருந்தார். 

அந்த அலைந்த இயக்குநர் யார் தெரியுமா?

சுந்தர் சி சொன்ன அந்த இயக்குநர் பத்ரி தான் என பலரும் வீடியோ கமெண்டில் தெரிவித்துள்ளனர். அவர் சுந்தர் சி., நடித்த வீராப்பு படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சந்தானம் நடித்திருந்தார். அதேசமயம் சந்தானம் செம பிஸியாக இருந்த நேரத்தில் பத்ரி தில்லு முல்லு படம் இயக்கினார். அப்படத்தில் சந்தானம் கடைசி ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் வந்து செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola