கிரி படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சி குறித்த நினைவுகளை இயக்குநர் சுந்தர் சி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அவர் திரைப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மீண்டும் வடிவேலு படங்களில் நடித்து வருவது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கிடையில் பார்த்திபன், சத்யராஜ் கூட்டணியில் வடிவேலும் நடித்துள்ள காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்ற வரிசையில் இயக்குநர் சுந்தர் சி - வடிவேலு படங்களின் காம்போ அல்டிமேட் வகையைச் சேர்ந்தது.
ஆரம்ப காலக்கட்டங்களில் தனது படங்களில் கவுண்டமணியை ஒப்பந்தம் செய்து வந்த சுந்தர் சி 2003 ஆம் ஆண்டு பிரசாந்த் இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் தான் முதல் முறையாக வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றினார். அந்த படத்தில் கைப்புள்ள கேரக்டரில் நடித்த வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றைக்கு பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு டிரேட் மார்க் ஆக அமைந்தது. இதனால் லண்டன், கிரி, தலைநகரம், நகரம் மறுபக்கம் என பல படங்களில் சுந்தர் சி - வடிவேலு காமெடி அதிகம் பேசப்பட்டது.
குறிப்பாக அர்ஜூன் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய கிரி படத்தில் வடிவேலு வீரபாகு கேரக்டரில் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் வடிவேலு தனது அக்காவை வைத்து டீலிங் பேசி பேக்கரி வாங்கியதாக முதல் நாள் இரவு நேரத்தில் அர்ஜூனிடம் கூறி இந்த ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என கூறுவார். ஆனால் மறுநாள் காலை இந்த விஷயத்தைக் கேட்டு ஒருவர் வடிவேலுவிடம் விசாரிப்பார். இதனை பார்க்கும் போது செம காமெடியாக இருக்கும்.
இந்த காட்சி உருவான பின்னணி குறித்து சுந்தர் சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் கோயம்புத்தூர் பக்கம் ஒரு பழக்கம் உண்டு. காலையிலேயே நம்மளை கடுப்பேத்தும் மாதிரி கேள்விகள் கேட்பார்கள். அதனை மனதில் கொண்டே வடிவேலுவிம் ரகசியத்தை ஒருவர் பொழுது விடிந்தவுடன் வந்து கேட்டால் எப்படி இருக்கும் என்ற பாணியில் எடுத்திருப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் அன்றைக்கு நடிக்க வேண்டியவர் வரவில்லை என்பதால் கிரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரின் தந்தையை நடிக்க வைத்தோம். தமிழே தெரியாத அவரை ஆக்ஷனை மட்டும் படமாக்கி டப்பிங் பேசினால் படக்குழுவினர் யாருமே அந்த காட்சிக்கு சிரிக்கவேயில்லை. ஆனால் அதன்பின் நெல்லை சிவாவை வைத்து டப்பிங் எடுத்தவுடன் தான் அனைவருக்கும் பிடித்த காமெடியாக மாறியதாக சுந்தர் சி கூறியுள்ளார்.