தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாக வலம் வருபவர் இயக்குநர் சுந்தர்.சி. காமெடி, ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களை மகிழ்விப்பது இவரது பாணி. இவருக்கு இன்று பிறந்தநாள். 


1968ஆம் ஆண்டு, விநாயக சுந்தர் வேல் என்ற இயற்பெயருடன் பிறந்த இயக்குநர் சுந்தர்.சி, தமிழ் மொழியில் சுமார் 34 திரைப்படங்களை இயக்கியுள்ளார்; 17 திரைப்படங்களில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். தன் திரைப் பயணத்தை மறைந்த இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராகத் தொடங்கிய இவர், 1995ஆம் ஆண்டு `முறைமாமன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடக்கத்தில் தன் முதல் திரைப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என விரும்பி, நடிகர் சரத் குமாரைத் தொடர்பு கொண்டார். அப்போதைய உச்சபட்ச நடிகர்களுள் ஒருவராக இருந்த நடிகர் சரத் குமாரைத் தயாரிப்பு நிறுவனத்தால் படத்தில் நடிக்க வைக்க முடியாமல் போனதால், மலையாள நடிகர் ஜெயராம், நடிகை குஷ்பூ ஆகியோருடன் `முறைமாமன்’ படத்தைத் தொடங்கினார் சுந்தர்.சி. நடிகர் ஜெயராமின் நகைச்சுவை உணர்வு `முறைமாமன்’ படத்தின் வெற்றிக்குப் பெரிதும் கைகொடுக்க, காமெடியில் கவனம் செலுத்த தொடங்கினார் இயக்குநர் சுந்தர்.சி. 



அடுத்தடுத்து நடிகர் கார்த்திக் கதாநாயகனாக, இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய `உள்ளத்தை அள்ளித் தா’, `மேட்டுக்குடி’, `உனக்காக எல்லாம் உனக்காக’ ஆகிய காமெடி திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வசூலைத் தந்ததோடு, இயக்குநராக அவருக்குத் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தையும் பெற்றுத் தந்தது. 1997ஆம் ஆண்டு, அப்போதைய உச்சபட்ச நடிகரான சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் சுந்தர்.சி. `அருணாச்சலம்’ படத்தின் கதையோடு சுந்தர்.சியை அணுகினார் ரஜினிகாந்த். தனக்கு அந்தப் படத்தின் கதை மீது பெரியளவிலான ஈடுபாடு இல்லை என்ற போதும், ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக அந்தப் படத்திலும் பணியாற்றி, மிகப்பெரிய வெற்றிப் படமாக அதனை உருவாக்கினார் இயக்குநர் சுந்தர்.சி.


2000ஆம் ஆண்டில் நடிகை குஷ்பூவைத் திருமணம் செய்துகொண்டார் சுந்தர்.சி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. 


2003ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி உருவாக்கிய இரண்டு திரைப்படங்கள் இன்றும் பேசப்படுபவை. நல்ல சிவம் என்ற கதாபாத்திரமும், `கைப்புள்ள’ என்ற கதாபாத்திரமும் நெட்டிசன்களின் கண் முன்னே எப்போதும் தென்படும் கதாபாத்திரங்கள். சுந்தர்.சியும் நடிகர் கமல் ஹாசனும் இணைந்து உருவாக்கிய `அன்பே சிவம்’ திரைப்படம் வெளியான போது, பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இன்றும் `கல்ட்’ அந்தஸ்து பெற்ற திரைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. `வின்னர்’ திரைப்படத்தில் நடிகர் பிரஷாந்த் முன்னணி வேடத்தில் நடித்திருந்தாலும், நடிகர் வடிவேலுவின் `கைப்புள்ள’ கதாபாத்திர உருவாக்கமும், அதன் காமெடி ட்ராக்கும் இன்றும் கொண்டாடப்படுபவை. கைப்புள்ள கதாபாத்திரத்தின் வசனங்களை நாம் ஒவ்வொரு நாளும் பேசிக் கொள்கிறோம்; யாராவது பேசுவதையும் கேட்கிறோம். இத்தகைய வெற்றிகளுக்குக் காரணம், இயக்குநர் சுந்தர்.சி. 



2006ஆம் ஆண்டு, `தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இயக்குநர் சுந்தர்.சி. தொடர்ந்து, `வீராப்பு’, `சண்டை’ முதலான பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், கடந்த 2012ஆம் ஆண்டு மீண்டும் `கலகலப்பு’ திரைப்படத்தின் மூலமாக திரைப்பட இயக்கத்தைத் தொடங்கினார். மிகப்பெரிய வெற்றிப் படமான `கலகலப்பு’ திரைப்படத்திற்குப் பிறகு, இவரது காமெடி சரவெடியில் உருவான `தீயா வேல செய்யணும் குமாரு’, `அரண்மனை’, `அரண்மனை 2’, `கலகலப்பு 2’ ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றவை. 


இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியை இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகப்படுத்திய `மீசைய முறுக்கு’ திரைப்படம் இவரின் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம். 


தன் திரைப்படங்களை மக்களை மகிழ்விக்கும் ஊடகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி, மக்களால் ஆதரிக்கப்படும் இயக்குநர் சுந்தர்.சி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!