எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என பிரபல இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அறியப்படுகிறார். பாகுபாலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஆர்.ஆர்.ஆர். ஆகிய படங்கள் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தார். அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாறன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் டைட்டில் அறிமுக நிகழ்ச்சி நவம்பர் 15ம் தேதி நடைபெற்றது.
இந்த பட நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரத்தில் நடைபெற்ற குளோப்ட்ரோட்டர் நிகழ்வில் எஸ்.எஸ்.ராஜமௌலி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ராஜமௌலி கடும் அதிருப்தியடைந்தார். அதேசமயம் அவரது அப்பாவும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் பேசும்போது, ஹனுமனின் ஆசீர்வாதம் படக்குழுவினருடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நிச்சயம் இது எனக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாகும். பொதுவாகவே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. என் அப்பா என்னுடன் பேசும்போது, ஹனுமன் பின்னால் இருந்து என்னை வழிநடத்துகிறார் என கூறினார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா என்பதை நினைத்து, எனக்கு கோபமாக வருகிறது. என் மனைவிக்கும் ஹனுமன் மீது அன்பு இருக்கிறது. அவரை தனது நண்பரைப் போல நடந்து கொண்டு அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வந்தது.
அதாவது, மேடையில் தடைகள் ஏற்பட்டவுடன் ஹனுமன் மீது கோபம் வந்ததாக ராஜமௌலி குறிப்பிட்டு பேசியிருந்தார். கடவுள் ஹனுமன் குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறி இயக்குநர் ராஜமௌலி மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்துள்ளனர். ஒரு இணையவாசி, ஹனுமன் பற்றிய ராஜமௌலியின் கருத்தால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அவர் ஒரு நாத்திகராக இருக்கலாம். எனினும் கடவுள் பற்றி இப்படி பேசுவதை ஏற்க முடியாது என கூறினார்.
மற்றொருவர், ராஜமௌலி சினிமாவில் வெற்றி பெற்றபோது அந்த புகழை கடவுளுக்கு சொல்லவில்லை. ஆனால் தோல்வியடைந்தபோது, அதற்கு கடவுளை குறை கூற தயாராக இருக்கிறார் என விமர்சித்துள்ளனர்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என தனது படங்கள் இந்து புராணங்களில் இருந்து ஈர்க்கப்பட்டவை என்ற நிலையில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என ராஜமௌலி கூறியிருப்பது திரையுலகிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.